"மழை நிவாரணம்: அரசின் கடின உழைப்பால் தமிழகமே மீண்டு வருகிறது - ஸ்டாலின்
''தமிழகத்தை படுபாதாளத்தில் தள்ளிய அந்த விடியா மூஞ்சிகளுக்கு என்றைக்கும் விடியவே விடியாது. அதை பற்றி கவலை கிடையாது, '' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வட சென்னையில் பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் பார்க்க துவங்கி உள்ளோம். வானிலை மையத்தின் கணிப்புகளை விட அதிக மழை கொட்டித் தீர்த்தது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலும், உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதனால் உண்டான தாக்கங்களை பார்த்து வருகிறோம். இதில் தமிழக அரசு அலட்சியமாக இருக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் உயிரிழப்பு பெரியளவில் ஏற்படவில்லை.
ஆனால், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை,மழை துவங்கியது முதல் தற்போது வரை தமிழக அரசு உதவி செய்து வருகிறது. மத்திய அரசிடம் நிதி கேட்டு உள்ளோம். இந்த பேரிடரில் இருந்து மீண்டு வருவோம்.
கடந்த காலங்களில் மழை வெள்ளத்தில் தவித்த சென்னையை மீட்டது போன்று மற்ற பகுதிகளையும் விரைவாக மீட்டெடுப்போம். ஒட்டு மொத்த தமிழகமும் மீண்டு வரும். தற்போதே சில மாவட்டங்கள் முழுமையாக மீண்டு வருகின்றன.அல்லல் படும் மக்களின் வேதனைகளை அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் மலிவான அரசியலில் ஈடுபடுகின்றனர். கடந்த ஆட்சியில், 2015ல் செயற்கை வெள்ளத்திலும், பல்வேறு புயல்களிலும் சென்னையை வெள்ளத்தில் தவிக்க விட்டது போன்று, தற்போது தவிக்கவிடவில்லை. அதற்கு பெஞ்சல் புயலும், தமிழக அரசும் எடுத்த நடவடிக்கைகளே சாட்சி.
முன்பு சென்னையில் மழை பெய்தால் உதவி கேட்டு அல்லல் படும் நிலையும், தன்னார்வலர்களிடம் உதவி கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிடும் நிலையும், எப்போது வெள்ளம் வடியும்நிலையும் இருந்தது. ஆட்சியாளர்களை களத்தில் பார்க்க முடியாது. அப்படியே வந்தாலும், என்ன பிரச்னை என தெரியாமல், 'வாக்காளப் பெருமக்களே' எனப் பேசுவார்கள். மீடியாக்கள் மைக்கை நீட்டினால், 'ப்ளீஸ் விட்டுவிடுங்கள்' எனக்கூறியவர்கள் தான் கடந்த கால ஆட்சியில் இருந்தனர். தன்னார்வலர்கள் உதவி செய்ய வந்தால் மிரட்டுவார்கள். அவர்கள் வழங்கும் நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள். அந்த காலம் மலையேறி போய்விட்டது.
தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால், மழை பெய்த அடுத்த நாளே சென்னை மீண்டுள்ளது. விடியலை தருவதுதான் உதயசூரியன். உதயசூரியனால் கண்கள் கூசும் ஆட்களுக்கு விடியல் என்றால் தெரியாது. விடியலை, 'விடியா ஆட்சி' என சொல்வார்கள். தமிழகத்தை படுபாதாளத்தை தள்ளிய அந்த விடியா மூஞ்சிகளுக்கு என்றைக்கும் விடியவே விடியாது. அது விடியவும் முடியாது. அதை பற்றி கவலை கிடையாது.
நம் மீது புகார் அளிப்பவர்களுக்கும், விமர்சனம் செய்பவர்களுக்கும் பணிகளை செய்வோம். நமக்கு ஓட்டுப்போட மறந்தவர்களுக்கும் நன்மை செய்வோம். தமிழக அரசுக்கு பாராட்டு கிடைப்பதால், எதிர்க்கட்சிகளை வயிறு எரிய வைத்து உள்ளது. எவ்வளவு மழை பெய்தாலும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் களத்தில் நிற்கின்றனர். நிவாரண உதவிகள் செய்கின்றனர். இதனால், நம்மால் அரசியல் செய்யமுடியவில்லை என தவிக்கின்றனர். எங்களை பொறுத்தவரை மக்களின் மனது தான் முக்கியம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.