பொன்முடி அப்படி பேசியிருக்கக் கூடாது : வழக்கை முடித்துவைத்த உயர்நீதிமன்றம்

சைவம் - வைவணம், பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து பொன்முடி பேசியது கடும் சர்ச்சைகளை உண்டாக்கியது. இதனையடுத்து, அவரது துணைப் பொதுச் செயலாளர் பதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பறித்தார். பிறகு தலைமை அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். பொன்முடியின் பேச்சுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதேபோல பொன்முடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது பொன்முடி
மீது வழக்குப் பதிவு செய்யும் அளவுக்கு முகாந்திரம் இல்லை என்று கண்டறியப்பட்டது என்றும், ஆகவே புகார்கள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டுவிட்டது எனவும் காவல் துறை தரப்பு வாதம் வைத்தது. இதனைக் கேட்ட நீதிபதி, பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரமும் இல்லை என காவல் துறை எப்படி முடிவு செய்தது என்று கேள்வி எழுப்பினார். 1971ஆம் ஆண்டு ஒரு சமூக சீர்திருத்தவாதி பேசியதையே பொன்முடி பேசினார் எனக் கூறி பொன்முடி பேசியது தொடர்பான வீடியோ, சமூக சீர்திருத்தவாதி பேசிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் முன்பு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “பொன்முடிக்கு எதிராக ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார்கள் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு ஆதாரங்கள் இல்லாததால் அவை முடித்து வைக்கப்பட்டன. இந்த புகார்கள் முடித்து வைக்கப்பட்டதற்கு எதிராக மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் புகார்தாரர்கள் மனுதாக்கல் செய்யலாம் அல்லது தனிநபர் புகார் தாக்கல் செய்யலாம்” என்று தெரிவித்தார்.
புகார் தாரர்கள் தரப்பில், பொன்முடிக்கு எதிராக புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தாமலேயே இந்த புகார்கள் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தனி நபர் புகார் தாக்கல் செய்யப்பட்டு அந்த புகாரானது தற்போது எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.