பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வந்ததே எங்களுக்கு வெற்றிதான்-டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி

நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைய இருக்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய பிரதமர் 2 மணிநேரமாக அதைப்பற்றி பேசவில்லை. அவர் மணிப்பூர், அரியானா சம்பவங்கள் பற்றி கவலைப்படவே இல்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நாங்கள் தோற்றுப்போவோம் என்று தெரியும். இருந்தாலும் பிரதமரை அவைக்கு வரவைக்க வேறு வழியில்லை என்றுதான் அதை கொண்டுவந்தோம். ஆனால் மணிப்பூர் பற்றியோ, அரியானா பற்றியோ அவர் பேசாததால் வெளிநடப்பு செய்தோம். தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை தேர்ந்து எடுப்பதில் மாற்றம் கொண்டு வருவதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதைப்போல கொண்டுவந்த டெல்லி அரசு சட்டத்தை நிறைவேற்றி விட்டனர். அதிகார போதையில் ஆளுங்கட்சி செயல்பட்டு வருகிறது. இதை தட்டிக்கேட்க முடியவில்லை. மக்கள் அவர்களுக்கு அதிகார பலத்தை கொடுத்து இருக்கிறார்கள். பிரதமர் அவைக்கு வந்ததே எங்களுக்கு பெரிய வெற்றிதான். கச்சத்தீவு பிரச்சினை பற்றி ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பலமுறை பேசி இருக்கிறேன். இதுதொடர்பான முதல்-அமைச்சரின் கடிதங்களை கொடுத்து இருக்கிறேன்.அதற்கு அவர்கள்தானே (காங்கிரசார்) கொடுத்தார்கள் என தெரிவிக்கிறார்கள். கச்சத்தீவு இன்றைக்கும் இந்தியாவுக்குத்தான் சொந்தம். நாடாளுமன்றத்தில் முறைப்படி சட்டம் இயற்றி கொடுக்கப்படவில்லை.மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் நிலத்தை எப்போதோ கையகப்படுத்தி கொடுத்துவிட்டோம். மத்திய அரசு பொய் சொல்கிறது. ரூ.50 லட்சம் கோடி பட்ஜெட்டில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க முடியாதா? தமிழன் என்றால் ஏமாந்தவனா? தமிழ்நாட்டு மக்கள் இதற்கு 2024 தேர்தலில் சரியான பதிலடி கொடுப்பார்கள்.தற்போது நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு போவார்கள். இதனால் நிச்சயமாக அவை திரும்பப் பெறப்படும். இல்லாவிட்டால் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் திரும்பப் பெறுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description