பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்

அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, மாதாந்திர உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட பார்வை மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மனவேதனை அளிக்கிறது. ஆட்சிப்பொறுப்பேற்றது முதல், பார்வை மாற்றுத்திறனாளிகளை தெருவில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, சென்னை மாற்றுத்திறனாளி ஆணையரகம் முன்பு அறப்போராட்டம் நடத்திய பார்வை மாற்றுத்திறனாளிகளை, திமுக அரசு காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி, பொய் கூறி ஏமாற்றி அழைத்துச்சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டது மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும். கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் அறிவித்த நிலையில் இதுவரையில் அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது மாற்றுத்திறனாளி மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
ஆகவே,
* பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
* அரசுத்துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களில் புத்தகக் கட்டுநர் போன்ற பணிகளில் பார்வை மாற்றுத்திறனாளிகளை கல்வித் தகுதிக்கேற்ப உடனடியாகப் பணியமர்த்த வேண்டும்.
* பட்டப்படிப்பு படிக்க முடியாத பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசே தொழிற்பயிற்சி வழங்கி, அரசுப்பணியும் வழங்க வேண்டும்.
* மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் சிறப்பு பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
* திருச்சி புத்தூரில் அமைந்துள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான மகளிர் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி இராஜேஸ்வரி அவர்கள் விடுதியில் மர்ம மரணம் அடைந்துள்ளது குறித்து காவல்துறை உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்,
என்பது உள்ளிட்ட பார்வை மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
செய்தியாளர்.மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description