பாதிக்கப்பட்ட பிரியாவின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் -அண்ணாமலை
பாதிக்கப்பட்ட பிரியாவின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கால் பந்தாட்ட வீரரின் இழப்பிற்கு அரசு ஈடு செய்ய வேண்டும். தமிழக முதல்வரின் ஸ்டார் தொகுதியாக மெச்சப்படும் சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட, தவறான சிகிச்சை காரணமாக மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் தந்தது.
முதல்வர் தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே பிரியாவின் கால் அகற்றப்பட்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். மிக ஏழ்மையான குடும்பத்தின், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த இளம் மாணவி பிரியா. கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்தார்.
தமிழக அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால், கால் அகற்றப்பட்டு, பின்னர் அவசர சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா இன்று காலை உயிரிழந்தார். கால் பந்தாட்ட வீரரின் கால்களை எத்தனை கவனமாக அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். அவர் கால்களை இழந்த வருத்தம் தீரும் முன், உயிர்நீத்த செய்தி பேரதிர்ச்சியாக வந்துள்ளது.
மூட்டு வலி காரணமாகச் சிகிச்சைக்கு வந்தவரின் மூச்சை நிறுத்தும் அளவிற்கா முதல்வர் தொகுதியில் மருத்துவமனை இருக்கிறது. அப்படியென்றால் பிற மருத்துவமனைகளின் தரம் எப்படி இருக்கும்? இதுதொடர்பாக விசாரணையும், அந்த மருத்துவமனையின் எலும்பியல் துறையைச் சேர்ந்த 2 மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பிறகு இடைநீக்கம் செய்யப்பட்டதாகத் தவல்கள் தெரிவிக்கின்றன.
தேவையான மருந்துகள் இருந்ததா? அறுவை சிகிச்சைக்கான அவசியமான வசதிகள் இருந்ததா? அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பில் என்ன குறை? முதல்வரின் தொகுதிக்கே இந்த நிலை என்றால் தமிழகத்தின் கிராமப்புற மருத்துவமனைகளின் நிலை என்னவாக இருக்கும். தமிழக அரசு இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.
நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருந்த ஒரு வீராங்கனையின் கனவுகளைப் பொசுக்கிய அவலத்திற்குப் பரிகாரமாக, பாதிக்கப்பட்ட பிரியாவின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசைத் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.