பயங்கரவாதத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு; குவாட் மாநாட்டில் ஜெய்சங்கர் பேச்சு

பயங்கரவாதத்திலிருந்து தனது மக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு' என்று குவாட் மாநாட்டில் பேசுகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் குவாட் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், ஜெய்சங்கர் பேசியதாவது: பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் குற்றவாளிகளையும் ஒருபோதும் சமமாகப் பார்க்கக்கூடாது. பயங்கரவாதத்திலிருந்து தனது மக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு.
பயங்கரவாதத்தைக் கையாள்வதில் இந்தியாவின் நிலைப்பாட்டை குவாட் தலைவர்கள் புரிந்து கொண்டு பாராட்டுவார்கள். உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும். வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து சரியான முடிவுகளை எடுக்க இந்தோ-பசிபிக் நாடுகள் சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்.
குவாட் அமைப்பின் செயல்பாடுகள் மிகவும் திறமையானதாக மாற்றப்பட்டு உள்ளது. கடந்த பல மாதங்களில், குவாட் முயற்சிகளில் நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து உள்ளோம். அதைப் பற்றி நாங்கள் விரிவாக விவாதிப்போம். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.