பனையூரில் ஒரே நாளில் 2 முக்கியக் கூட்டங்கள் – திமுக அரசு மீது தாக்குதலுக்கு தயாராகும் விஜய்!

ஒரே நாளில் பனையூரில் நடந்த 2 மீட்டிங்.. திமுகவை அட்டாக் செய்ய அடுத்தக்கட்ட திட்டம்.. தயாரான விஜய்!
சென்னை: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு மற்றும் விவசாயிகளை தவெக தலைவர் விஜய் சந்தித்து இருக்கிறார். பனையூரில் உள்ள தவெகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பரந்தூர் போராட்டத்திற்கு தவெக துணை நிற்கும் என்றும் விஜய் உறுதி கொடுத்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கி இருக்கிறார். கடந்த சில நாட்களாக தவெக சார்பாக நடந்து வரும் கல்வி விருது நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்று பரிசுகளை அளித்து வருகிறார். இதன் 4ஆம் கட்ட விழா நாளை மீண்டும் நடக்கவுள்ளது.
பனையூரில் நடந்த சந்திப்பு
39 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வி விருது அளிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் பிறந்தநாள் விழாவில் அடுத்தக் கட்ட அரசியல் அறிவிப்புகள் குறித்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழு மற்றும் விவசாயிகளை விஜய் சந்தித்துள்ளார்.
ஜனவரியில் விஜய் செய்த சம்பவம்
விஜய் தனது முதல் கள அரசியல் பயணத்தை பரந்தூரில் இருந்துதான் தொடங்கினார். ஜனவரி மாதம் பரந்தூர் சென்ற விஜய், அங்குள்ள விவசாயிகள் மற்றும் போராட்டக் குழுவினரை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார். பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து வகையிலும் ஆதரவாக நிற்கும் என்றும் அறிவித்தார்.
விஜயை சந்தித்த விவசாயிகள்
இந்த நிலையில் தவெக அலுவலகத்தில் பரந்தூர் போராட்டக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் விவசாயிகள் தவெக அலுவலகத்திற்கு வந்து விஜயை சந்தித்தனர். அவர்களை வரவேற்று உபசரித்த விஜய், பின்னர் அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது விஜய்-க்கு போராட்டக் குழு தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அடுத்த திட்டம்
இதன்பின் பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு தவெக துணை நிற்கும் என்று விஜய் உறுதி அளித்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. அதேபோல் ஜாக்டோ ஜியோ அமைப்புச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழு விஜயை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதனால் அடுத்தடுத்து திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை தவெக ஒருங்கிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
செய்தியாளர் மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி