நாக்கை வெட்டி டாட்டூ: இருவர் கைது

திருச்சி: திருச்சி, மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 24. இவர், அதே பகுதியில், 'ஏலியன் ஈமோ டாட்டூ ஸ்டியோ' என்ற பெயரில், பச்சை குத்தும் மையம் நடத்தி வருகிறார்.
இவர், மும்பை சென்று, 2 லட்சம் ரூபாய் செலவில், கண்ணில் ஊசி போட்டு விழியை கலராக மாற்றுவது, நாக்கின் நுனியில், 'வி' வடிவில் வெட்டி, நாக்கை இரண்டாக காண்பிக்கும் டாட்டூ என, உயிருக்கு ஆபத்தான டாட்டூ போடுவதை கற்று வந்துள்ளார்.
இது, உயிருக்கு ஆபத்தானது என தெரிந்தும், திருச்சியில் தன் மையத்தில், இயற்கைக்கு முரணாக இதுபோன்ற டாட்டூவை இருவருக்கு போட்டுள்ளார். மேலும், தன் கடையில் பணியாற்றும் நண்பரான, கூத்தைப்பாரையைச் சேர்ந்த ஜெயராமன், 24, என்பவருக்கும் கண்ணில் ஊசிபோட்டு, விழியை கலராக மாற்றி, நாக்கில் பிளவு ஏற்படுத்தி உள்ளார்.
இவற்றை செய்து கொண்ட முறையையும், ஜெயராமனின் டாட்டூவுடனான முகத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
மேலும், பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் சென்று தன் டாட்டூவை காட்டி போட்டோ எடுத்து, அதையும் சமூக வலைதளங்களில் ஜெயராமன் பதிவிட்டுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான மற்றும் தவறான வழிகாட்டுதலுக்கான இந்த வீடியோக்களை பார்த்த, திருச்சி மாநகராட்சி, ஸ்ரீரங்கம் பகுதி சுகாதாரத்துறை ஆய்வாளர் கார்த்திகேயன், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.
கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, ஹரிஹரன், ஜெயராமனை கைது செய்தனர். ஏற்கனவே, 2016ம் ஆண்டு, சென்னை மருத்துவக் கல்லுாரியில் பயின்ற திருச்சியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற மாணவர், இதுபோன்று சலுானில் ஹேர் டிரான்பிளன்டேஷன் செய்தபோது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description