தியாகி இமானுவேல் சேகரனாரின் உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை- விஜய்

தியாகி இமானுவேல் சேகரனாரின் 68ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் அவரது திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தலைவர் விஜய். மேலும் இமானுவேல் சேகரன், உரிமையின் குரல் என புகழாரம் சூட்டியுள்ளார்.
தவெக தலைவர் விஜய், இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை.
தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவருடைய மகள் சுந்தரி பிரபாராணி, இமானுவேல் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போலீசார் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினர், அமைப்புகளுக்கு நேரம் ஒதுக்கி இருந்தனர். அந்த நேரத்தில் மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக இன்று காலை பெண்கள் உள்பட ஏராளமானோர் முளைப்பாரி எடுத்தும், வேல் குத்தியும் நினைவிடத்தில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது
சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி
திரு.இமானுவேல் சேகரன் அவர்கள். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை.
ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 28 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.