குஜராத்திற்கு ரூ.34,200 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்; நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: குஜராத்திற்கு ரூ.34,200 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களையும் பிரதமர் மோடி நாளை ( செப்டம்பர் 20) தொடங்கி வைககிறார்.
குஜராத் மாநிலத்திற்கு நாளை பிரதமர் மோடி செல்கிறார். அவர் தொடங்கி வைக்க உள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத்தில் நாளை காலை 10:30 மணியளவில் பாவ்நகரில் நடைபெறும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று, ரூ.34,200 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் அவர் உரையாற்றுவார்.
பிரதமர் தோலேராவை வான்வழியாக ஆய்வு செய்வார். பிற்பகல் 1:30 மணியளவில், அவர் ஒரு மறுஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்க உள்ளார். பின்னர் லோத்தலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தைப் பார்வையிட உள்ளார். கடல்சார் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பிரதமர் ரூ.7,870 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்.
இந்திரா கப்பல்துறையில் மும்பை சர்வதேச கப்பல் முனையத்தை அவர் திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.