சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மேலும் குறைவு
தக்காளி விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து கடந்த மாதம் (ஜூலை) ஆரம்பத்தில் இருந்து அதன் விலை கிடுகிடுவென உயரத்தொடங்கியது. அதன் பின்னரும் தொடர்ந்து விலை உயர்ந்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு மேல் சென்றது மட்டுமல்லாமல், வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.200 வரை சென்றது. தக்காளியை வாங்க முடியாத அளவுக்கு அதன் விலை எகிறியது. விலை எப்போதுதான் குறையும்? என்று இல்லத்தரசிகள் எதிர்பார்த்தபடியே இருந்தது. இந்தநிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து விலை சரியத் தொடங்கியது. கடந்த ஒரு வாரத்தில்ல் மட்டும் தக்காளி கிலோவுக்கு ரூ.70 முதல் ரூ.90 வரை குறைந்துள்ளது. இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளியின் விலை மேலும் சரிந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் முதல் தர தக்காளி இன்று ஒரு கிலோ ரூ.10 குறைந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தரம், மூன்றாம் தர தக்காளிகளின் விலையும் குறைந்துள்ளது. தமிழகத்தில் விளைந்துள்ள தக்காளி சென்னை கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு வரத்தொடங்கியதால் விலை குறைந்துள்ளது. விலை தொடர்ந்து குறைந்து வருவதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.