காசர்கோடு கோயில் விழாவில் பட்டாசு விபத்து; 154 பேர் காயம்; ஆபத்தான நிலையில் 8 பேர்
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரத்தில் தேரு அஞ்சோடம்பலம் வீரேர்காவு கோவில் அமைந்துள்ளது. இங்கு இன்று (அக்டோபர் 29) அதிகாலை 12.20 மணியளவில் களியாட்டம் விழா நடைபெற்றது.
அப்போது வாண வேடிக்கை நிகழ்ச்சியின் போது வெளிவரும் தீப்பொறிகள் வெடித்துச் சிதறி திடீரென தீப்பிடித்தது.
பட்டாசு விபத்தால் சேதமடைந்த பகுதிஇதில், பெண்கள் குழந்தைகள் உள்பட 154க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், படுகாயமடைந்த 8 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். காயம் அடைந்தவர்கள் முதலில் காசர்கோடு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மங்களூரு மற்றும் கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு, அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோயில் விழாவில் கலந்துகொண்டவர்கள் கூறுகையில், "வாண வேடிக்கையிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகளால் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. தீ பெரிய தீப்பந்தமாக எரிந்தது. இந்த தீ விபத்தில் அருகிலிருந்தவர்களின் முகம், கைகள் மற்றும் ஆடைகளில் தீக்காயம் ஏற்பட்டது. பொது மக்களும், தீயணைப்பு வீரர்களும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்" என்றனர்.
காசர்கோடு கோயிலில் வெடி விபத்துமேலும், வான வேடிக்கை பட்டாசின் தீப்பொறியானது பட்டாசு குவியலில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காசர்கோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இன்பசேகர், மாவட்ட எஸ்.பி ஆகியோர் கண்காணிப்பில் தீயணைப்புப் படையினர் மற்றும் சமூக தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். பட்டாசு விபத்தில் காயம் அடைந்த ஒவ்வொருவரின் நிலையையும் கண்காணித்து வருவதாகக் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.