கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு!
அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து, பரிசீலித்து கனியாமூர் தனியார் பள்ளியை சீரமைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி : கடந்த மாதம் 17-ந் தேதி சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நடந்த போராட்டத்தில் கலவரம் நடந்தது.
இந்த கலவரத்தின் போது பள்ளியில் இருந்த பொருட்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.கலவரம் தொடர்பாக 350-க்கும் மேற்பட்டவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து உள்ளனர், மேலும் தொடர்ந்து கைது நடவடிக்கை பாய்ந்து வருகிறது.
இந்நிலையில், கனியாமூர் கலவரத்தின் போது சிதைந்து போன பள்ளி சீரமைப்பது தொடர்பான கோரிக்கையை ஏற்று, பள்ளியை மறுசீரமைப்பு செய்ய அனுமதி வழங்கி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆட்சியருக்கு 10 நாட்கள் பரிசீலிக்க அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, போலீசார், பெற்றோர், பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.