dark_mode
Image
  • Tuesday, 07 October 2025

ஏ.ஐ., தொழில்நுட்ப பாடப் புத்தகம் வந்தாச்சு: ஆசிரியர்கள், ஆய்வகங்கள் வசதி என்னாச்சு

ஏ.ஐ., தொழில்நுட்ப பாடப் புத்தகம் வந்தாச்சு: ஆசிரியர்கள், ஆய்வகங்கள் வசதி என்னாச்சு

மதுரை : கல்வித்துறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏ.ஐ., தொழில்நுட்ப பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், அதற்கான ஆசிரியர்கள், ஹைடெக் லேப்களில் வசதி இல்லை என சர்ச்சை எழுந்துள்ளது.

 

தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 'செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் இணையக் கருவிகள் அறிவுத் திட்டம்' (டி.என்.,ஸ்பார்க்) துவக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்பு மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,), கோடிங், இணையக் கருவிகள் உள்ளடக்கம் கொண்ட பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவ்வகுப்புகளை நடத்த தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கவில்லை.

மேலும் மதுரை மாவட்டத்தில் 72 பள்ளிகள் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கிராமப்புற பள்ளிகளில் பி.எஸ்.என்.எல்., நெட் வசதி கிடைக்கவில்லை என புகார் உள்ளது. அதேசமயம் திட்டங்களை செயல்படுத்த உத்தரவு பிறப்பிப்பதில் மட்டும் குறியாக உள்ளனர் என தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது: மாநிலத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் ஏ.ஐ., பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஹைடெக் லேப் வசதி மிக முக்கியம். அனைத்து பள்ளிகளிலும் இந்த லேப்கள் உள்ளன. லேப்களுக்கு தேவையான இணையசேவையை அந்தந்த பகுதிகளில் எது நன்றாக கிடைக்கிறதோ அதன் இணைப்பை பெற்று தலைமையாசிரியர்கள் செயல்படுத்தினர். ஆனால் பிப்ரவரி முதல் பி.எஸ்.என்.எல்.,க்கு மாற கல்வித்துறை உத்தரவிட்டது. இதன்படி கிராமப் பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இதன் சேவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சேவை இல்லாத பகுதிக்கு இணைப்பு பெற குறைந்தது ரூ.1 லட்சம் கட்டணம் செலுத்த கூறுகின்றனர். இச்செலவை யார் ஏற்பது என்பதால் இணையசேவை பிரச்னையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசு பள்ளிகளில் ஏ.ஐ., தொழில்நுட்ப பாடத் திட்டம் நடத்துவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதே பள்ளியில் உள்ள ஆங்கிலம், கணக்கு, அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு ஏ.ஐ., பாடங்களை நடத்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு பாடங்களையும் நடத்துவதால் கற்பித்தல் பணி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

related_post