எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு! ரிசல்டை பார்ப்பது எப்படி?

தமிழகத்தில் 2023- 2024-ஆம் கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டன. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in,www.dge.tn.gov.in,https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description