dark_mode
Image
  • Sunday, 09 March 2025

இவர்களை மனிதர்கள் என எப்படி சொல்ல முடியும்? மயிலாடுதுறை கலெக்டர் சர்ச்சை பேச்சு.. கனிமொழி கண்டனம்

இவர்களை மனிதர்கள் என எப்படி சொல்ல முடியும்? மயிலாடுதுறை கலெக்டர் சர்ச்சை பேச்சு.. கனிமொழி கண்டனம்

 

மயிலாடுதுறை: சீர்காழி அடுத்துள்ள கிராமத்தில் 3 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் சிறுமி மீதும் தவறு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சர்ச்சை கருத்தைக் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள கனிமொழி, நாம் ஏன் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அடுத்துள்ள கிராமத்தில் 3 வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். அங்கன்வாடிக்குச் சென்ற சிறுமிக்கு 16 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.

 

 

மயிலாடுதுறை பாலியல் தொல்லை

 

மேலும், சிறுமியின் தலை மற்றும் முகத்தில் கல்லைக் கொண்டும் தாக்கிவிட்டு, அங்கிருந்து ஓடியுள்ளான். இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்த நிலையில், மைனராக என்பதால் கண்காணிப்பு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்..

 

இதில் பாதிக்கப்பட்ட அந்த 3 வயது சிறுமி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமிக்குத் தலை மற்றும் கண் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், அதற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தான் மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

 

சர்ச்சை பேச்சு

 

அதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறுமி மீதும் தவறு இருக்கிறது என்பது போல அவர் கூறியது சர்ச்சையைக் கிளப்புவதாக இருந்தது. அவர் மேலும் கூறுகையில், "3 வயதுக் குழந்தை கடந்த வாரம் நடந்த சம்பவத்தைப் பார்த்து இருப்பீர்கள்.. இதில் குழந்தை மீதும் தவறு உள்ளது. கவனித்துப் பார்த்தால் அது தெரியும். எனக்குக் கிடைத்த தகவலின்படி, குழந்தை அந்த சிறுவன் முகத்தில் துப்பி உள்ளது. அதுவே பிரச்சினைக்குக் காரணம். 2 பேரையுமே பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்" எனக் கூறியிருந்தார்.

 

3 வயது சிறுமி பலாத்காரம்.. சர்ச்சையாக பேசிய மயிலாடுதுறை கலெக்டர் பணி இடமாற்றம்! தமிழக அரசு அதிரடி

 

கனிமொழி கண்டனம்

 

மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியின் இந்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. பலரும் அவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக எம்பியும் திமுக மகளிரணி தலைவருமான கனிமொழியும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "குழந்தைகளுக்கு எதிராக இப்படியான கருத்துகளைப் பேசும் நபர்கள் எப்படி தங்களைப் படித்தவர்கள் என்றும், மனிதர்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள். நாம் ஏன் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இடமாற்றம்

 

முன்னதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியிருந்த நிலையில், அவரை பணியிடமாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டார். ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருக்கும் எச்எஸ் ஸ்ரீகாந்த் பணியிடமாறுதல் மூலம் மயிலாடுதுறை ஆட்சியராக ஏபி மகாபாரதிக்கு பதிலாக நியமனம் செய்யப்படுகிறார் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டு இருந்தார்.

 

BY.PTS NEWS M.KARTHIK

comment / reply_from

related_post