அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில மோசடி வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம் - விசாரணை தள்ளிவைப்பு

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோ நிலத்தை தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா இருவர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு காவல்துறை தரப்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யபட்டது.
இந்த வழக்கு தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மீதான குற்ற வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு நிலுவையில் உள்ளது. தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனிடேயே இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த எம்பி, எல்எல்ஏ கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் அவரின் மனைவி மீது மே23 ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தின் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேங்கடவரதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன் கூட்டியே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருப்பதால் வழக்கு விசாரணை தள்ளி வைக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 17ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தின் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதால் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு பதிவு நடத்தப்படாமல் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description