ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் தமிழக போலீஸ்: எச்.ராஜா
கரூர்:' 'தமிழகத்தில் காவல் துறையும், ஹிந்து மதத்துக்கு விரோதமாக செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது,'' என, பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
கரூரில், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், பாஜ., கிளை நிர்வாகிகள் தேர்தல் நவ.30 வரை நடக்கிறது. டிச.1 முதல் 15 வரை நகரம், ஒன்றியத்துக்கும், 31க்குள் மாவட்டத்துக்கும் தேர்தல் நடக்கிறது. ஜனவரி முதல் வாரத்தில் மாநில அளவிலும், ஜன., 15க்குள் அகில இந்திய அளவில் பா.ஜ., தலைவர் தேர்தல் நடக்கிறது.
சமீப காலமாக, ஹிந்து மதத்துக்கு எதிரான கருத்துகள் சமூக வலைதளங்களில் தைரியமாக பரப்பப்படுகின்றன. அதை, தமிழக அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. அதனால், மத மோதல்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில், ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், பாடகி இசைவாணி பாடியுள்ளார்.
அவர் மீதும், இயக்குனர் ரஞ்சித் மீதும் தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகை கஸ்துாரியை கைது செய்ததை போல, பாடகி இசைவாணி மீதும் நடவடிக்கை தேவை. ஆனால், அவரை கண்டுகொள்ளாமல் உள்ளதால், தமிழக காவல் துறையும் ஹிந்து மதத்துக்கு விரோதமாக செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்க நீதிமன்றத்தில் தொழிலதிபர் அதானி மீது, குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த விஷயத்தில் அதானிக்கும் பிரதமருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, குற்றப்பத்திரிகையில் தமிழகம் உள்ளிட்ட, நான்கு மாநிலங்கள் இடம் பெற்றுள்ளது. அந்தந்த மாநிலங்களின் அதிகாரிகள் மீது, புகார் சொல்லப்பட்டுள்ளது. அந்த காலக்கட்டத்தில், நான்கு மாநிலங்களிலும், பா.ஜ., ஆட்சியில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.