வரி இல்லாவிட்டால் அமெரிக்கா அழிக்கப்படும்: மீண்டும் புலம்புகிறார் அதிபர் டிரம்ப்

வரிகள் இல்லாமல், நாம் ஏற்கனவே பெற்ற டிரில்லியன் கணக்கான டாலர்கள் இல்லாவிட்டால், நமது நாடு முற்றிலுமாக அழிக்கப்படும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
இந்தியா, சீனா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மிக அதிகமாக வரிகளை விதித்தார்.
'அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி, சர்வதேச நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் தன் இஷ்டப்படி கூடுதல் வரி விதித்தது சட்டவிரோதமானது' என, அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் உத்தரவை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
வரிகள் இல்லாமல், நாம் ஏற்கனவே பெற்ற டிரில்லியன் கணக்கான டாலர்கள் இல்லாவிட்டால், நமது நாடு முற்றிலுமாக அழிக்கப்படும். மேலும் நமது ராணுவ சக்தி உடனடியாக அழிக்கப்படும். தீவிர இடதுசாரி நீதிபதிகள் குழு அதைப் பொருட்படுத்தவில்லை.
ஆனால் ஒபாமா நியமித்த ஒரு ஜனநாயகக் கட்சிக்காரர் உண்மையில் நமது நாட்டைக் காப்பாற்ற ஓட்டளித்தார். அவரது துணிச்சலுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் அமெரிக்காவை நேசிக்கிறார், மதிக்கிறார். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.