dark_mode
Image
  • Friday, 29 November 2024

மேட்டூர் அணை நீர்மட்டம்: 100 அடிக்கு கீழே சரிவு!

மேட்டூர் அணை நீர்மட்டம்: 100 அடிக்கு கீழே சரிவு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 நாள்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழே சரிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

 

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி அங்கிருந்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வறண்டு கிடந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

ஜூலை 27-ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஜூலை 30- ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பி வெள்ள நீர் உபரிநீர் போக்கி வழியாக வெளியேற்றப்பட்டது. பின்னர் கர்நாடக மாநிலத்தில் மழை இல்லாத காரணத்தால் கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் படிப்படியாக சரியத்தொடங்கியது.

இன்று(செப்டம்பர் 25) காலை 60 நாள்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு கீழே சரிந்தது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 101.08 அடியிலிருந்து 99.79 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,282 கனஅடியிலிருந்து 1537 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 20,000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 15,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 64.56 டி.எம்.சியாக உள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம்: 100 அடிக்கு கீழே சரிவு!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description