dark_mode
Image
  • Friday, 07 March 2025

பாட்டிலுக்கு 10 ரூபாய்.. தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகளில் ஏப்ரல் முதல் வருது அதிரடி திட்டம்

பாட்டிலுக்கு 10 ரூபாய்.. தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகளில் ஏப்ரல் முதல் வருது அதிரடி திட்டம்

 

சென்னை: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி செல்லும் குடிமகன்கள், மலைப்பகுதிகளில், காடுகளில், சாலையோரங்களில் வீசிச்செல்வது நடக்கிறது. இதனால் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது, இதை தடுக்க உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்துக்கு டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் கோரியிருக்கிறது. இந்த திட்டம் ஏப்ரல் மாதத்துக்குள் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

தமிழநாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இருக்கின்றன. இந்த கடைகளில் 2,919 மது அருந்தும் பார்கள் உள்ளன. பொதுவாக டாஸ்மாக் மதுக்கடைகளில் தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவிற்கு மது விற்பனை நடைபெறும்.. வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

 

பொதுவாகவே வார இறுதி நாட்கள், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மது விற்பனை மிக அதிகமாக இருக்கும். இதில் உச்சபட்சம் என்றால் புத்தாண்டில் தான் மது விற்பனை மிக அதிகமாக இருக்கும். ஒட்டுமொத்தமாக தமிழத்தில் மது விற்பனையை சராசரி அளவாக கணக்கெடுத்தால் தினந்தோறும் 70 லட்சம் மதுபாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகி வருகிவதாக கூறப்படுகிறது.

 

காடுகளில் மதுபாட்டில்கள்: இந்த மதுபாட்டில்களை குடிமகன்கள் மலைவாசஸ்தலங்கள், வனப்பகுதிகளில், காடுகளை வீசி செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். எங்கெல்லாம் அருவிகள், தண்ணீர் ஓடும் ஓடைகள் இருக்கிறதோ அங்கே எல்லாம் மதுபாட்டில்களுடன் சென்று ஆட்டம் போட்டு, இறுதியில் பாட்டில்களை உடைத்து போட்டு போகிறார்கள். இதேபோல் டாஸ்மாக் கடைகளை சுற்றி காடுகள் இருந்தால் அல்லது காலியிடம் இருந்தால், குடித்துவிட்டு வீசிவிட்டு செல்கிறார்கள்.

 

ஊட்டி கொடைக்கானல் டாஸ்மாக்: இதன் காரணமாக கால்நடைகளும், விலங்கினங்களும் பாதிக்கப்படுகின்றன. ஊட்டி, கொடைக்கானல், மேகமலை, வால்பாறை, ஏற்காடு, ஏலகிரி உள்பட தமிழ்நாட்டின் மலைவாசல் சுற்றுலா தலங்களில் வனவிலங்குகள் மதுபாட்டில்கள் வீசி செல்வதன் பாதிப்பு குறித்து கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

நீலகிரியில் நடைமுறை: இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவதற்கான திட்டத்தை வகுக்க 'டாஸ்மாக்' நிர்வாகத்துக்கு அறிவுறுத்தல்களை வழங்கியது. இல்லாவிட்டால் மலைப்பிரதேசங்களில் மதுபானங்கள் விற்க தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்துவிட்டு, காலி பாட்டிலை ஒப்படைக்கும்போது அந்த தொகையை திரும்ப ஒப்படைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

 

தமிழ்நாடு முழுவதும் அமல்: நீலகிரி மாவட்டத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இந்த திட்டப்படி, விற்பனை செய்யப்பட்ட 29 லட்சம் மதுபாட்டில்களில் 18.50 லட்சம் பாட்டில்கள் திரும்பப்பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி அடுத்தகட்டமாக தேனி, தர்மபுரி, கோவை, திருவாருர், நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் படிப்படியாக அமலுக்கு வந்தது.

 

ஏப்ரல் மாதம் நடைமுறை: இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் மாதத்துக்குள் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 'டாஸ்மாக்' நிர்வாகம் உத்தரவாதம் அளித்திருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் 'டாஸ்மாக்' நிர்வாகம் இறங்கி உள்ளது.

 

டாஸ்மாக் டெண்டர்: சென்னை, சேலம், திருச்சி, மதுரை என 4 மண்டலங்களாக பிரித்து , காலி மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி மறுசுழற்சி செய்வதற்காக 'டாஸ்மாக்' நிறுவனம் டெண்டர் கோரியிருக்கிறது. இந்த திட்டம் டெண்டர் முடிந்து வரும் ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

10 ரூபாய் கூடுதல் வசூல்: இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும் போது இந்த தொகை திரும்ப வழங்கப்படும். 'டெண்டர்' எடுக்கும் நிறுவனம், இந்த காலி பாட்டில்களை மறுசுழற்சி செய்து மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளன. அதேநேரம் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும், பணியாளர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை என்று குடிமகன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

comment / reply_from

related_post