dark_mode
Image
  • Thursday, 29 May 2025

"தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு சேவைகளை தொடங்க நடவடிக்கை"

'தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு சேவைகளை தொடங்க நடவடிக்கை' எடுக்கப்பட்டுவருவதாக கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

வைத்தீஸ்வரன் கோயிலில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த அவர்,
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பார்வையிட்டார்.
விவசாயிகளிடமிருந்து கமிஷன் பெறக் கூடாது என அறிவிப்பு பலகை வைக்க
அறிவுறுத்தினார்.

பின்னர் வைத்தீஸ்வரன் கோயில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார் .தொடர்ந்து இரண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கினார். அதனைத் தொடர்ந்து ரேஷன் அங்காடியில் ஆய்வு மேற்கொண்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் அங்கு வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசின் முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ
ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தற்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தில் 117 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்ப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.

இதற்காக தேவைப்படும் இடங்களில் ஒரே இடத்தில் இரண்டு கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகாரிகள் கனிவுடன் மக்கள் பிரச்சனையை கேட்டறிந்து அதற்குண்டான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு 117 கோடி ரூபாய் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 150 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் கொடுக்கும் சங்கமாக இல்லாமல் வங்கி சேவை போன்று பல்வேறு சேவைகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் லலிதா, மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் உடன்
இருந்தனர்.

related_post