தவெக மாநாடு: விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி - ஸ்டாலின் உத்தரவு

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் பாதுகாப்பு பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலர் சத்தியமூர்த்தி குடும்பத்து ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 'செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவந்த சத்தியமூர்த்தி (வயது 27) (PC 1347) என்பவர் கடந்த 26.10.2024 அன்று இரவு சுமார் 8.00 மணியளவில் அரசியல் கட்சி ஒன்று நடத்திய மாநாட்டின் பாதுகாப்பு பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யூர், அகரம் மேம்பாலம் அருகில் எதிர்பாராதவிதமாக கார் ஒன்று மோதிய விபத்தில் பலத்த காயமடைந்தார்.
சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னை இராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று (29.10.2024) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
காவலர் சத்தியமூர்த்தி மறைவு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். காவலர் சத்தியமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description