dark_mode
Image
  • Sunday, 23 November 2025

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும்

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை: நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் வளத்தி ஆகிய இடங்களில் தலா, 3 செ.மீ., மழை பெய்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் மியான்மர் கடலோரப் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நீடிக்கிறது. இன்று, வங்கதேசம், மியான்மர் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும்.

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 11 வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அத்துடன் சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 4 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நவ., 12 வரை தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியதாவது:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கினாலும், மேற்கில் இருந்து வரும் காற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை. அதேநேரம், கிழக்கு திசை காற்று முழுமையாக கிடைக்கவில்லை. இதனால், பருவமழை பொழிவில் ஒருவித தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பகல் நேர வெப்பநிலை அதிகரிப்பதும், அதனால் மாலை, இரவு நேரங்களில் வெப்பச்சலன மழை பெய்வதும் நடக்கிறது.

இந்நிலை, வரும் 12ம் தேதி வரை தொடரும். அதன்பின், கிழக்கு திசை காற்று வேகம் எடுக்கும் போது, வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

தென்சீன கடலில், பிலிப்பைன்ஸ் அருகில் கல்மேகி என்ற சூறாவளி உருவாகி உள்ளது. இது, தாய்லாந்து நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த அமைப்பால், வடகிழக்கு பருவமழையில் பெரிதாக தாக்கம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

related_post