dark_mode
Image
  • Friday, 29 November 2024

"தகுதி நீக்கத்தால் உங்கள் சாதனைகளை குறைத்துவிட முடியாது!" வினேஷ் போகத் குறித்து முதல்வர் பெருமிதம்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்தம் விளையாட்டில் உலகின் முன்னணி வீராங்கனைகளை தோற்கடித்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதி போட்டிக்கு முன்னேற்றியிருந்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பங்கேற்றிருந்த வினேஷ் போகத், நடப்பு உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனையை தோற்கடித்து காலிறுதியில் நுழைந்தார். அங்கு, உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில், கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இறுதி போட்டியில் வென்றால் தங்கம் கிடைத்திருக்கும்.

இப்படி இருக்கையில் 50 கிலோ எடை பிரிவில் விளையாட இருந்த வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 50 கிலோ எடை பிரிவில் விளையாட 50 கிலோ மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் வினேஷ் 150 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். எடை குறைப்புக்காக வினேஷ் நேற்றிரவு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இதற்கு பலனாக 1.85 கிலோ எடை குறைந்திருக்கிறது. இருப்பினும் அனுமதிக்கப்பட்ட எடையை விட 150 கிராம் கூடுதலாக இருந்ததால் அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.

இதனையடுத்து அமெரிக்க வீராங்கனைக்கு தங்க பதக்கம் வழங்கப்படுவதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்திருக்கிறது. அதேபோல வினேஷ் தரவரிசை பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தகுதி நீக்கம் குறித்து மேல் முறையீடு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வினேஷுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்திருக்கிறார். அதேபோல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர், இதில் சதி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். விளக்கத்தை ஏற்காத இந்தியா கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.

இந்நிலையில் வினேஷ் போகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது x தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "வினேஷ், நீங்கள் எல்லா வகையிலும் உண்மையான சாம்பியன். உங்களின் வலிமை மற்றும் இறுதிப் போட்டிக்கான பயணம் மில்லியன் கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. ஒரு சில கிராம் கணக்கில் தகுதியிழப்பு செய்ததால் உங்களின் உத்வேகத்தையும் சாதனைகளையும் குறைக்க முடியாது. ஒரு பதக்கத்தைத் தவறவிட்டாலும், அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள்" என்று கூறியுள்ளார்.

comment / reply_from

related_post

newsletter

newsletter_description