dark_mode
Image
  • Saturday, 02 August 2025

ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்; வலுவான நிலைக்கு முன்னேறுமா இந்திய அணி?

ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்; வலுவான நிலைக்கு முன்னேறுமா இந்திய அணி?

லண்டன்: ஓவல் டெஸ்டில் இந்திய பந்துவீச்சில் அதிர்ந்தது இங்கிலாந்து அணி. 'வேகத்தில்' பிரசித் கிருஷ்ணா, சிராஜ் மிரட்டினர். இரண்டாவது இன்னிஸ்சில் ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம் விளாசினார்,

 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'ஆண்டர்சன் - சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கி உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 204/6 ரன் எடுத்திருந்தது.

6 ரன், 4 விக்.,


நேற்று(ஆக.,1) இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. டங்க் வீசிய முதல் ஓவரில் கருண், வாஷிங்டன் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். இவரது அடுத்த ஓவரில் கருண் (57) அவுட்டானார். மறுபக்கம் 'வேகத்தில்' மிரட்டினார் அட்கின்சன். இவரது 'ஷார்ட் பிட்ச்' பந்தில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்ட வாஷிங்டன் (26), ஓவர்டனிடம் 'கேட்ச்' கொடுத்தார். முதல் 20 நிமிடத்தில் இரு பேட்டர்களை இழந்த இந்தியா 220/8 என திணறியது.

அட்கின்சன் ஓவரில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா 'டக்' அவுட்டாகினர். கடைசி 6 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 224 ரன்னில் ஆல் அவுட்டானது. சொந்தமண்ணில் (ஓவல்) முதன் முறையாக அட்கின்சன், 5 விக்கெட் சாய்த்தார்.

'சூப்பர்' துவக்கம்


இங்கிலாந்து அணிக்கு டக்கெட், கிராலே அதிரடி துவக்கம் தந்தனர். ஆகாஷ் தீப் பந்தில் 'ரிவர்ஸ் ஸ்கூப்' முறையில் சிக்சருக்கு அனுப்பி மிரட்டினார் டக்கெட். ஆகாஷ் வீசிய 6 வது ஓவரில் டக்கெட், மூன்று பவுண்டரி அடிக்க, ஸ்கோர் 'டி-20' போட்டி போல, மின்னல் வேகத்தில் உயர்ந்தது. 10 ஓவரில் 71/0 ரன் எடுத்தது.

போட்டியின் 13வது ஓவரை வீசினார் ஆகாஷ். 5வது பந்தில் மீண்டும் 'ரிவர்ஸ் ஸ்கூப்' செய்ய முயன்றார் டக்கெட் (43). பந்து இவரது கிளவ்சில் பட்டு, ஜுரலிடம் 'கேட்ச்' ஆக சென்றது. டெஸ்டில் டக்கெட்டை 4வது முறையாக (5 இன்னிங்ஸ்) அவுட்டாக்கினார் ஆகாஷ்.

சிராஜ் நம்பிக்கை


மறுபக்கம் வேகத்தில் கைகொடுத்தார் சிராஜ். இவரது பந்தில் கேப்டன் போப் (22) எல்.பி.டபியுள்., ஆனார்.

முதலில் அம்பயர் அசன் ராஜா, அவுட் தர மறுத்தார். கடைசி வினாடியில் சுப்மன் 'ரிவியூ' கேட்டார். 'ரீப்ளேயில்' பந்து போப் ஸ்டம்சை தகர்க்க, இந்திய வீரர்கள் கொண்டாடினர். தொடர்ந்து அனுபவ ஜோ ரூட் (29), பெத்தெல் (6) என இருவரையும் 'எல்.பி.டபிள்யு.,' முறையில் வெளியேற்றினார் சிராஜ்.

பிரசித் கிருஷ்ணா, 'வேகத்தில்' ஸ்மித் (8), ஓவர்டன் (0), அட்கின்சன் (11) அவுட்டாகினர். தேநீர் இடைவேளைக்குப் பின் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 242/8 ரன் எடுத்து, 18 ரன் முன்னிலை பெற்றது.

ஜெய்ஸ்வால் அதிரடி


தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் அதிரடி துவக்கம் தந்தார். மறுமுனையில், ராகுல் (7) சோபிக்கவில்லை. சாய் சுதர்சனும் (11) ஏமாற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வாலுக்கு, இங்கிலாந்து வீரர்கள் கேட்ச்களை தவறவிட, அதனை பயன்படுத்தி அரைசதம் விளாசினார். 2வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன் எடுத்து 52 ரன் முன்னிலை பெற்றுள்ளது. ஜெய்ஸ்வால் (51), ஆகாஷ் தீப் (4) களத்தில் உள்ளனர்.

related_post