எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
'நீங்கள் ஒரு வார்த்தை பேசினால் நாங்கள் நூறு வார்த்தை பேச வேண்டியது
இருக்கும். கொடநாடு பற்றி பேசி எங்களுக்கு பூச்சாண்டி காட்ட வேண்டாம்.
திமுக
ஆட்சியில் அமைச்சராக வேண்டும் என்றால் அவர்கள் ஊழல் செய்திருக்க வேண்டும்,
அவர்கள் மீது வழக்குகள் இருக்க வேண்டும். இதுதான் அடிப்படை தகுதி' என முன்னாள்
அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள
அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் கொத்தடிமை வேலை செய்து அவர்கள் போட்ட பதவி என்ற பிச்சைகளை வைத்து அதன் மூலம் வெளியே தெரிந்தவர் தான் ஆர்.எஸ். பாரதி. அவருக்கு இன்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
நங்கநல்லூர் கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்து ஆர்.எஸ்.பாரதி அடித்த கொள்ளைகள்
சொல்லில் அடங்காது. இல்லாத ஏழுமலைக்கு கடன் கொடுத்தவர் அவர் (ஆர்.எஸ்.பாரதி)
ஆதி திராவிட மக்களை இழிவுபடுத்தும் வகையில் உயர்நீதிமன்றத்தில் இருக்கின்ற
ஆதிதிராவிட சமுதாயத்தை சார்ந்த நீதிபதிகளை ஆர்.எஸ்.பாரதி எவ்வாறு அவமதித்தார்
என்று அனைவருக்கும் தெரியும்.
அதுமட்டுமில்லாமல் ஊடகங்களை பற்றியும் தவறாக பேசினார். வயதான காலத்தில்
வாய்க்கு வந்தபடி உளறி பதவி பெற வேண்டும் என்பதற்காக அதிமுகவையும், எடப்பாடி
பழனிசாமியையும் விமர்சனம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆர்.எஸ்.பாரதியை போல் ஆரம்ப காலகட்டத்தில் அன்னக்காவடியாக இருந்தாரா?
வசதியான குடும்பத்தில் பிறந்து கட்சியின் மீது கொண்ட பற்றால் படிப்படியாக
உயர்ந்து எல்லாவிதமான பதவிகளையும் பெற்று ஒரு உயர்ந்த நிலைக்கு வந்தவர்
இபிஎஸ்.
உங்களைப் போன்று தலைவர்களுக்காக எஜமான சேவை செய்து பதவி வாங்கினாரா?
கொத்தடிமையாக இருந்து பதவி வாங்கிக்கொண்டு இபிஎஸ்சை விமர்சனம் செய்வது
கண்டிக்கத்தக்கது.
நீங்கள் ஒரு வார்த்தை பேசினால் நாங்கள் நூறு வார்த்தை பேச வேண்டியது இருக்கும்.
எனவே ஆர்.எஸ்.பாரதி வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
முதல்வர் ஸ்டாலினை திருப்திப்படுத்தி பதவி வாங்குவதற்கு நாங்கள் தான்
கிடைத்தோமா. இதேபோன்று நாகரிகமற்ற முறையில் இபிஎஸ்சை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தால் நாங்கள் தகுந்த பதிலடி அளிப்போம். கொடநாடு வழக்கில் குற்றம் நடந்த உடன் அவர்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அவர்களை ஜாமீனில் எடுத்தவர்கள் யார்?
எனவே கொடநாடு பற்றி பேசி எங்களுக்கு பூச்சாண்டி காட்ட வேண்டாம். ஓபிஎஸ் திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு வேலை செய்கிறார். இன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பமாக கருணாநிதியின் குடும்பம் இருக்கிறது. திரைப்படத் துறையில் இருந்து வந்து இவ்வளவு சொத்துக்கள் சம்பாதிக்க முடியுமா?
தற்பொழுது பதவியில் இருக்கும் 13 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக வேண்டும் என்றால் அவர்கள் ஊழல் செய்திருக்க வேண்டும். அவர்கள் மீது வழக்குகள் இருக்க வேண்டும் இதுதான் அடிப்படை தகுதி.
சினிமாத்துறை , ரியல் எஸ்டேட் உள்ளிட்டவற்றை திமுக அரசு கபளீகரம் செய்துள்ளது.
30 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யுங்கள். மூன்றாயிரம் பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யுங்கள். ஐந்து ஆண்டுகள் சிறையில் வையுங்கள். ஆனால் அதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்.
எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம், ஒத்துழைப்பும் தர தயாராக
இருக்கிறோம். விசாரணையை கண்டு யாரும் ஓட மாட்டார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது வழக்கு போட்டால் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவார்கள் என்று திமுக நினைத்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பதற்கு திமுக ஆட்சியில் இருந்தபோது லஞ்ச
ஒழிப்புத் துறையை வைத்து அவர் மீது போடப்பட்ட வழக்குகளும் ஒரு காரணம்.
லஞ்ச ஒழிப்புத் துறையை வைத்து ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்குகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு அவர் உள்ளானார் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.