'உலகின் சூப்பர் பணக்காரர்கள்' பட்டியல் இடம்பிடித்தார் முகேஷ் அம்பானி..!
உலகளவில், 100 பில்லியன் டாலர் அதாவது, 7.50 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் செல்வந்தர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி இணைந்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி ஆசியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக திகழ்கிறார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நடப்பு ஆண்டில் மட்டும் 23.8 பில்லியன் டாலர்களாக அதிகரித்தன் காரணமாக அவருடைய சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை கடந்திருக்கிறது.
இதன் மூலம் 100 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை கடந்த கோடீஸ்வரர்களின் 11 பேர் கொண்ட தனித்துவமான பட்டியலில் முகேஷ் அம்பானி 11ஆவதாக இணைந்துள்ளார். அக்டோபர் 8ம் தேதியன்று முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100.6 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டிருக்கிறது.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்ததை அடுத்து,'டெஸ்லா' நிறுவனர் எலான் மஸ்க், 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசோஸ் போன்றோரை கொண்ட 'எலைட்' பட்டியலில் அவர் சேர்ந்திருப்பதாக, 'புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10வது இடம் வாரன் பஃபெட். அவருடைய சொத்து மதிப்பு தற்போது 101.1 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. 9வது இடம் ஸ்டீவ் பால்மர். இவரது சொத்து மதிப்பு 102 பில்லியன் டாலர்களாக உள்ளது. 8வது இடத்தின் அமெரிக்காவின் லேரி எலிசன் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 103.6 பில்லியன் டாலர்கள்.
7வது இடத்தில் இருக்கும் செர்ஜி பிரின் சொத்து மதிப்பு 115.2 பில்லியன் டாலர்கள் ஆகும். 123 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் 6வது இடத்தில் உள்ளார். 5வது இடம் லேரி பேஜ். இவருடைய சொத்து மதிப்பு 124.5 பில்லியன் டாலர்கள்.
4வது இடம் பில் கேட்ஸ். இவருடைய சொத்து மதிப்பு 127.9 பில்லியனாக உள்ளது. 3வது இடத்தில் பிரான்ஸ் நாட்டின் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார். இவருக்கு 155.6 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு உள்ளது. 2வது இடம் ஜெஃப் பெசோஸ், 190.8 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் உள்ளார். முதல் இடம் எலான் மஸ்க், 222.1 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் உள்ளார்.
இதில், 11 வது இடத்தில் அம்பானி உள்ளார். ஆசியாவில் முதலிடத்தில் உள்ளார். பங்குச் சந்தையில், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்ததை அடுத்து, அம்பானியின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100.6 பில்லியன் டாலர்களாக உள்ளது.