இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்..!
14-வது ஐபிஎல் சீசனின் குவாலிஃபையர் 1 துபையில் நடைபெற்றது. லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இதில் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதல் பேட்டிங் செய்த டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.
173 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். அன்ரிச் நோர்க்கியா வீசிய முதல் ஓவரிலேயே டு பிளெஸ்ஸி 1 ரன்னுக்கு போல்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதன்பிறகு, ராபின் உத்தப்பா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர்.
10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. உத்தப்பா அரைசதம் அடித்து 51 ரன்களும், ருதுராஜ் 27 ரன்களும் எடுத்திருந்தனர். வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 9-ஐத் தாண்டி இருந்தது.
இங்கே க்ளிக் செய்யவும்: உத்தப்பா, ருதுராஜ் பாட்னர்ஷிப்: 10 ஓவரில் 81 ரன்கள்!
இதன்பிறகு, அக்ஷர் படேல் ஓவரில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து மீண்டும் சற்று அதிரடிக்கு மாறினார். ரவிச்சந்திரன் அஸ்வின் ஓவரில் உத்தப்பாவும் இரண்டு பவுண்டரிகள் அடித்து மீண்டும் ரன் ரேட்டை உயர்த்தினார்.
சென்னை பேட்டிங் நல்ல நிலையில் சென்றுகொண்டிருந்தபோது டாம் கரன் பந்தில் ஷ்ரேயஸ் ஐயரின் சிறப்பான கேட்ச்சில் உத்தப்பா 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உத்தப்பா, ருதுராஜ் இணை 2-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது.
பரிசோதனை முயற்சியாக ஷர்துல் தாக்குர் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். அது பலனளிக்கவில்லை. முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். இதிலிருந்து மீள்வதற்குள் அம்பதி ராயுடு அடுத்த ஓவரில் 1 ரன்னுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால், ஆட்டம் டெல்லி பக்கம் திரும்பியது.
எனினும், அரைசதம் அடித்து விளையாடி வந்த ருதுராஜ் நம்பிக்கையாய் களத்தில் இருந்தார்.
கடைசி 5 ஓவர்களில் சென்னை வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்பட்டன. நோர்க்கியா மற்றும் ஆவேஷ் கான் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் தலா 1 பவுண்டரி கிடைக்க கடைசி 3 ஓவர்களில் 35 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை இருந்தது.
18-வது ஓவரை நோர்க்கியா மீண்டும் வீச ருதுராஜ் இரண்டு பவுண்டரிகள் அடித்து அசத்தினார். இதனால், அந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தன.
12 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆவேஷ் கான் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்திலேயே ருதுராஜ் (70) ஆட்டமிழந்தார். தோனி களமிறங்கினார்.
விக்கெட் விழுந்த அடுத்த பந்திலேயே மொயீன் அலி பவுண்டரி அடித்து நெருக்கடியை சற்று தணித்தார். தோனி வந்து இறங்கியவுடன் இரண்டாவது பந்திலேயே மிரட்டல் சிக்ஸர் அடித்து அதகளப்படுத்தினார்.
கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன. ஸ்டிரைக்கில் மொயீன் அலி. கடைசி ஓவரை ககிசோ ரபாடா வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாம் கரனிடம் பொறுப்பை ஒப்படைத்தார் பந்த்.
'த்ரில்' கடைசி ஓவர்:
முதல் பந்திலேயே மொயீன் அலி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆட்டத்தில் விறுவிறுப்பு நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அடுத்த பந்து டாம் கரனுக்கு ஹாட்ரிக் பந்து. ஆனால், தோனி பவுண்டரி அடித்தார்.
4 பந்துகளில் 9 ரன்கள் தேவை:
அடுத்த பந்தும் 'எட்ஜ்' பட்டு பவுண்டரி போக கடைசி 3 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டன. அடுத்த பந்து வைடாக வீசப்பட்டது. 3 பந்துகளில் 4 ரன்கள் தேவை. ஆனால், தோனி பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 6 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 18 ரன்கள் விளாசினார்.