"இந்திய அரசை எதிர்த்து போராடுகிறோம்" - ராகுலின் பேச்சுக்கு பா.ஜ., தலைவர்களின் கடும் கண்டனம்

' நாட்டில், பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., மட்டுமல்ல, இந்திய அரசையும் எதிர்த்து போராடி வருகிறோம்,'' என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதற்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ' இந்திரா பவன்' கட்டடத்தை அக்கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவர் சோனியா இன்று(ஜன.,15) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: இந்தக் கட்டடம் சாதாரணமானது அல்ல. இது இந்த நாட்டின் மண்ணில் இருந்து எழுந்தது. லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பு மற்றும் தியாகத்தின் விளைவு. சுதந்திரப் போராட்டத்தின் மிகப்பெரிய பலன் நமது அரசியலமைப்பு ஆகும். பா.ஜ., அல்லது ஆர்.எஸ்.எஸ்., என்ற அரசியல் சார்ந்த அமைப்புகளை எதிர்த்து போராடுகிறோம் என நீங்கள் நினைத்தால், நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் புரியாத நபர்கள். பா.ஜ.,வும் ஆர்.எஸ்.எஸ்.,ம் நாட்டின் ஒவ்வொரு அமைப்புகளையும் கைப்பற்றி விட்டன. நாம், பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.,ஸை மட்டுமல்ல, இந்திய அரசையும் எதிர்த்து போராடுகிறோம். இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
இந்திய அரசையும் எதிர்த்து போராட்டம் என்ற ராகுலின் பேச்சுக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக பா.ஜ., தலைவர் ஜேபி நட்டா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மறைப்பதற்கு இனி ஏதும் இல்லை. காங்கிரசின் மோசமான முகத்தை அக்கட்சி தலைவர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர். இந்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம் என நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள விரும்பியதை தெளிவாக எடுத்துக்கூறிய ராகுலை பாராட்டுகிறேன். ராகுலும் அவரை சுற்றி உள்ளவர்களும் இந்தியாவை அவதூறு செய்யவும், இழிவபடுத்தவும், அவமதிக்கவும் விரும்பும் அர்பன் நக்சல்களுடன் தொடர்பில் உள்ளனர் என்பது ரகசியம் அல்ல. அவரது நடவடிக்கைகளும் இந்த நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. அவரது ஒவ்வொரு சொல்லும், செயலும், நாட்டை பிரிக்கவும், சமூகத்தை பிளவுபடுத்தும் திசையிலேயே உள்ளன. பலவீனமான இந்தியாவை விரும்பும் அனைத்து சக்திகளையும் ஊக்குவிப்பதில் காங்கிரஸ் ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது. அவர்களின் அதிகார பேராசை நாட்டின் ஒருமைப்பாட்டை சமரசம் செய்வதையும் நாட்டு மக்களின் நம்பிக்கையை கெடுப்பதிலும் உள்ளது. ஆனால், இந்திய மக்கள் புத்திசாலிகள். அவர்கள் எப்போதும் ராகுலையும் அவரது அழுகிய சித்தாந்தத்தையும் நிராகரிக்க முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் நட்டா கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியலமைப்பு மீது பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், ' பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்திய அரசை எதிர்த்து போராடுகிறோம். '' என்றார். எனவே, ராகுலும், காங்கிரசும், அரசியலமைப்பு நகலை கையில் ஏந்துவது ஏன் என கேள்வி கேட்டு உள்ளார். ராகுலின் பேச்சுக்கு மேலும் பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description