இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை..!
கொரோனா 2 வது அலையால் இந்தியா முழுவதுமே மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. அதன் படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிகம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.இதற்கு பதில் அளித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு நிதி உதவி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50000 வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து மத்திய அரசு உள்துறையின் துணைச் செயலாளர் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதி சுற்றறிக்கையாக அனுப்பி வைத்துள்ளார். அதில் அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கொரோனாவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 நிதி உதவி வழங்க வேண்டும்.
2020 மார்ச் மாதம் அதாவது கொரோனா பரவத் தொடங்கிய காலத்தில் இருந்து உயிரிழந்தவர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும், அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உதவித்தொகை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
ஆனால் கொரோனா நிவாரண நிதி மாநில அரசுகளின் பணத்தில் இருந்து வழங்க வேண்டும் என்ற உத்தரவிற்கு கேரளா உட்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பணத்தை மத்திய அரசே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்கள் வற்புறுத்தி வருகின்றன