அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: 'யார் அந்த சார்?' - கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிசாமி

Anna University Case: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய நபர் யார் என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: கடந்த 6 நாட்களுக்கு முன்பு அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடத்தது மிகுந்த அதிர்ச்சிக்குரியது. இந்தியளவில் இது பேசப்படுகிறது. மாநிலம் முழுவதும் காட்டுத்தீ போல இந்த விசயம் பரவியுள்ளது. உயர்நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு அதிமுக பெண் வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். அதிமுக பெண் வழக்கறிஞர் ரிட் மனுவாக தாக்கல் செய்து விசாரணை நடந்தது. 3 உயர் பெண் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
எம்ஐஆர் கசிந்தது சட்டத்திற்கு புறம்பாக உள்ளது. எம்ஐஆரில் உள்ள தகவலில் பாதிக்கப்பட்ட பெண்ணே ... சார் கூட கொஞ்ச நேரம் இரு...' என்று தன்னிடம் கூறப்பட்டதாக தெரிவித்துள்ளார். யார் அந்த சார் என்பது குறித்து காவல்துறையிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. யார் அந்த சார்..? புகார் எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்து காவல்துறை ஆணையர் கூறியதை மறுநாள் உயர்க் கல்வித்துறை அமைச்சர் மறுத்து பேசினார். உண்மைக் குற்றவாளிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த போராட்டம் நடத்திய அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் மீது வழக்கு பதிந்தது கண்டிக்கத்ததக்கது.
நேற்று முதலமைச்சர் கன்னியாகுமரியில் திறந்த கண்ணாடி இழை பாலம் திட்டம் நான் முதல்வராக இருந்தபோது கொண்டு வந்தது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் பெண் செவிலியரிடம் திமுகவை சேர்ந்தவர் அவரது அந்தரங்க படத்தை காட்டி மிரட்டியுள்ளார். செவிலியர் காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி பிரச்சனை குறித்து புகாரளித்தது அதிமுக இல்லை. பாதிக்கப்பட்ட பெண். அவரே சொல்லியுள்ள தகவல் அடிப்படையில்தான் யார் அந்த சார் என விசாரிக்க கோருகிறோம். தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவரை பாதுகாக்க அனைத்து அமைச்சர்களும் வரிந்து கட்டி பேசி வருகின்றனர். பொள்ளாச்சி வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற நான் உத்தரவு போட்டேன்.
அண்ணா நகர் சிறுமி பாலியல் புகார் வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ள நிலையில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது திமுக அரசு. இந்த ஆட்சியில் சிறுமி , மாணவிகள் , பெண்கள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் அடிப்படையிலேயே யார் அந்த சார் என கேட்கிறோம். யாரைக் காப்பாற்ற அரசும் காவல்துறையும் முயற்சிக்கிறது. கண்டிப்பாக அதிமுக அரசு அமைந்தவுடன் இவற்றுக்கெல்லம் தீர்வு காணப்படும். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசுக் கல்லூரி மாணவிகள் பாலியல் பிரச்சனை இருப்பதாக குறித்து போராட்டம் நடத்துகின்றனர். ஒவ்வொரு சம்பவமாக வெளியில் வர தொடங்கியுள்ளது. ஆவுடையார்கோவில் செவிலியர் கொடுத்த புகார் குறித்து எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்? அவருக்கு திமுக அமைச்சர் ஒருவர் பாதுகாப்பு கொடுத்து வருகிறார்.
அவர் திமுக நிர்வாகி என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. மக்களுக்கு உண்மை தெரியும். ஞானசேகரன் மீது பல வழக்குகள் உள்ளன. சரித்திரப் பதிவேடு குற்றவாளியான அவரை கண்காணிக்காமல் இருந்தது ஏன்? சிசிடிவி கேமராக்கள் குறித்த உண்மையும் மறைக்கப்பட்டுள்ளன. திமுகவில் இல்லாத ஒருவர் திமுகவின் பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்றது எப்படி? அவர் வீட்டில் அமைச்சர் சாப்பிட்டதாக கூறுகின்றனர். 2024 ம் ஆண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஆண்டாக அமைந்துவிட்டது. 2025ம் ஆண்டு பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள ஆண்டாக மலர இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description