Senthil Balaji : செந்தில் பாலாஜி உடல்நிலை எப்படி இருக்கு.? மருத்துவர்கள் கூறியது என்ன.? லேட்டஸ்ட் அப்டேட் இதோ
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சற்று சிரமம் இருப்பதால் மருத்துவர்கள் இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். மருத்துவர்களின் கண்காணிப்பில் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை நுரையீரல் தொடர்பாக பரிசோதனை செய்ய மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
செந்தில் பாலாஜியும் அமலாக்கத்துறையும்
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக முறைகேட்டில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது 2013ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல கட்டங்களை கடந்த வந்தது. ஒரு கட்டத்தில் இந்த வழக்கு முடிவடைந்த நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை தூசி தட்டி வழக்கை விசாரிக்க தொடங்கியது.
கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்த வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.
இந்த சோதனையையடுத்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதிகாலை நேரத்தில் கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் இருதய பகுதியில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மூச்சுவிடுவதில் சிரமம்
சுமார் ஒருவருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. இதனிடையே நேற்று மதியம் திடீரென மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் இன்று காலை இருதயவியல் மூத்த மருத்துவர்கள் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.
நுரையீரல் பரிசோதனை
இதனை தொடர்ந்தே நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் இன்று காலை பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். அதன் பிறகே செந்தில் பாலாஜிக்கு என்ன சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் முடிவு செய்ய உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.