"வெற்று வாக்குறுதிகளால் பதவியின் கண்ணியத்தை பிரதமர் அழித்துவிட்டார்" - பிரியங்கா காந்தி தாக்கு
140 கோடி இந்தியர்களுக்கு வெற்று வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அளித்து நாட்டின் உயரிய, மரியாதைக்குரிய பிரதமர் பதவியின் கண்ணியத்தை நரேந்திர மோடி அழித்துவிட்டார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கடுமையாக தாக்கி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'உண்மையே கடவுள்' என்று மகாத்மா காந்தி சொல்வார். முண்டக உபநிஷத்தில் உள்ள 'சத்யமேவ ஜெயதே' என்பது நமது தேசிய முழக்கம். உண்மையை நிலைநாட்டும் இந்த லட்சியங்கள், இந்திய சுதந்திர இயக்கம், இந்தியாவின் மறுசீரமைப்பு மற்றும் பொது வாழ்க்கையின் லட்சியங்களாக மாறின. உண்மையே பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் நாட்டில், உயர்ந்த பதவியில் இருப்பவர் அசத்தியத்தை நாடக்கூடாது.
இந்திய தேசிய காங்கிரஸுக்கு எதிராக பிரதமர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு அப்பாற்பட்டவை. அடுத்த தேர்தலுக்காக காத்திருக்காமல், ஆட்சி அமைந்தவுடன் மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம் என எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில், பொதுப் பணம், உத்திரவாதங்கள் மூலம் தினமும் மக்களின் பாக்கெட்டுகளில் போடப்படுகிறது.
நாட்டு மக்கள் முன் தனது வார்த்தைகளுக்கு இனி எந்த மதிப்பும் இல்லை என்பதை பிரதமர் புரிந்து கொண்டுள்ளார். 100 நாள் திட்டம், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலை வாய்ப்புகள், 100 ஸ்மார்ட் நகரங்கள், கறுப்புப் பணத்தை மீட்பது, பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, டாலருக்கு நிகராக ரூபாயை கொண்டு வருவோம் என்றது, நல்ல நாட்களை கொண்டு வருவோம் என்றது... இவையெல்லாம் பொய்யாகிவிட்ட வாக்குறுதிகள் என்று நாடு முழுவதும் இப்போது குற்றம் சாட்டப்படுகிறது. பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை.
140 கோடி இந்தியர்களுக்கு வெற்று வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அளித்து நாட்டின் உயரிய மற்றும் மரியாதைக்குரிய பதவியின் கண்ணியத்தை பிரதமர் அழித்துள்ளார். அவர் காங்கிரஸைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மாறாக, சத்தியத்தின் உதவியுடன் தனது பதவியின் கண்ணியத்தை மீட்டெடுக்க அவர் பாடுபட வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தேர்தல் வெற்றிக்காக உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது. அவற்றை நிறைவேற்ற முடியாததால் இப்போது மக்கள் முன் மோசமாக அம்பலமாகி நிற்கிறது. காங்கிரஸின் போலி வாக்குறுதி கலாச்சாரத்துக்கு எதிராக நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஹரியானா மக்கள் காங்கிரசின் பொய்களை நிராகரித்து, நிலையான, முன்னேற்றம் சார்ந்த மற்றும் செயல் ஊக்கம் மிக்க அரசாங்கத்தை எப்படி விரும்பினார்கள் என்பதை சமீபத்தில் பார்த்தோம். காங்கிரஸுக்கு அளிக்கும் வாக்கு என்பது திறமையற்ற நிர்வாகம், மோசமான பொருளாதாரம், மிக மோசமான கொள்ளை ஆகியவற்றுக்கான வாக்கு என்பதை நாடு மிக அதிக அளவில் உணர்ந்து வருகிறது. இந்திய மக்கள் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் விரும்புகிறார்கள். கடந்த காலத்தில் இருந்த அதே நிலையை அல்ல.
கர்நாடகாவில் ஆளும் கட்சிக்குள் அரசியல் போட்டி தீவிரமடைந்து உள்ளது. அதோடு, வளர்ச்சியைப் பற்றி அக்கறை காட்டாமல் கொள்ளையடிப்பதிலேயே காங்கிரஸ் குறியாக இருக்கிறது. அதோடு, தற்போதுள்ள திட்டங்களையும் திரும்பப் பெறப் போகிறார்கள். இமாச்சல பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. தெலங்கானாவில் விவசாயிகள் தங்களுக்கு உறுதியளித்த கடன் தள்ளுபடிக்காக காத்திருக்கின்றனர்" என பிரதமர் மோடி விமர்சித்திருந்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்களை எச்சரித்துள்ளேன். உங்களால் முடிந்த அளவு மட்டும் வாக்குறுதிகளை அளிக்க வேண்டும். 5, 6, 10 அல்லது 20 உத்தரவாதங்களை அறிவிக்கக் கூடாது என்று கூறியுள்ளேன். நிதி ஆதாரத்தின் அடிப்படையில் உத்தரவாதங்கள் அறிவிக்கப்பட வேண்டும். இல்லையெனில், திவால் நிலை ஏற்படும். சாலைகள் போடுவதற்கு பணம் இல்லை என்றால், மக்கள் அனைவரும் உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். அரசாங்கம் தோல்வியுற்றால், வருங்கால சந்ததியினருக்கு கெட்ட பெயர்தான் மிஞ்சும்' எனத் தெரிவித்திருந்ததை சுட்டிக் காட்டி பிரதமர் மோடி தனது விமர்சனத்தை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.