பாஜக வெறும் பொய்களை பரப்பி... பொய்களை பேசி அரசியல் செய்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
திமுக இளைஞரணியின் 45ம் ஆண்டு தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இளைஞர் அணியின் தலைமைச் செயலகமான அன்பகத்தில் நடந்தது.
விழாவிற்கு, திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் வருவாய் மாவட்ட வாரியாக இளைஞர் அணியின் சமூக வலைத்தளப் பக்கங்களையும், இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான சமூக வலைத்தளப் பயிற்சியையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த பயிற்சியை 7 தொழில்நுட்ப வல்லுநர்கள் வழங்கினர். பின்னர் அமைப்பு நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புதிதாக தொடங்கப்பட்ட 'உங்களுடன் உதயநிதி' சமூக வலைத்தளப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும், விழாவில் 45 ஆண்டு கால இளைஞரணி செயல்பாடுகள் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிலேயே எந்த ஒரு இயக்கமும் அணியை தொடங்குவதற்கு முன்பே திமுகவில் இளைஞர் அணியை தொடங்கியவர் தலைவர் மு.க.ஸ்டாலின். அதேபோன்று திமுகவில் பல அணிகள் இருந்தாலும், அதில் முதல் அணி இளைஞர் அணிதான். அதை நாம் நிரூபித்தும் காட்டியிருக்கிறோம். பாராளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி 6 முறை தமிழ்நாட்டிற்கு வந்தார். எப்படியாவது 2 அல்லது 3 சீட் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். 6 முறை அல்ல ஆயிரம் முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் மோடியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றியையும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றியையும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.
பாஜ வெறும் பொய்களை பரப்பி, பொய்களை பேசி அரசியல் செய்கிறது. ஆனால் நமக்கு திராவிட இயக்க வரலாறு இருக்கிறது. தற்போது சமூக வலைத்தளம் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் அனைவரும் சமூக வலைத்தளத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். மீண்டும் தமிழ்நாட்டை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் ஆள்வார். இதுதான் இளைஞர் அணியின் இலக்காக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழா முடித்து வெளியே வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், "பொறுப்புகள் மாற்றம் குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு எப்போதும் இருக்கும். தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. ஏற்கனவே நீட் எதிர்ப்பு மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி உள்ளோம்" என்றார்.