dark_mode
Image
  • Friday, 07 March 2025

பாஜகவுக்கு குட்பை- அதிமுகவுடன் கை கோர்க்கும் பாமக? அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் உறுதி? தேமுதிக கதி?

பாஜகவுக்கு குட்பை- அதிமுகவுடன் கை கோர்க்கும் பாமக? அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் உறுதி? தேமுதிக கதி?

 

சென்னை: தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பமாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி அண்ணா திமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைவது உறுதியாகிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கூட்டணியில் பாமக இணையும் நிலையில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

2021 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் பாமகவும் இடம் பெற்றது. அந்த தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 5 இடங்களில் வெற்றி பெற்றது. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெறாத நிலையில் பாஜக கூட்டணியிலேயே பாமக நீடித்தது.

 

அதிமுக கொடுத்த ராஜ்யசபா சீட்

அதிமுக- பாஜக- பாமக கூட்டணி அமைக்கப்பட்ட காலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அதிமுக ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்தது. தற்போது அன்புமணியின் பதவி காலம் முடிவடைய இருக்கிறது. பாஜக கூட்டணியில் இருக்கும் வரையில் அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பியாக வாய்ப்பே கிடையாது.

 

பாமகவில் மோதல்

 

இதனிடையே பாமகவில் பாஜகவுடனான கூட்டணியை தொடருவதில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் பொதுவெளியில் பகிரங்கமாக வெடித்திருந்தன. டாக்டர் ராமதாஸைப் பொறுத்தவரையில் அதிமுக கூட்டணி பக்கம் தாவலாம் என்பது அவரது நிலைப்பாடு.

 

Advertisement

 

எடப்பாடி பழனிசாமியுடன் ஜிகே மணி சந்திப்பு

 

இந்த பின்னணியில் சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமகவின் கவுரவத் தலைவரான ஜிகே மணி சில நாட்களுக்கு முன்னர் சந்தித்தார். ஜிகே மணியின் குடும்ப திருமண விழா அழைப்பிதழ் கொடுக்கத்தான் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் என கூறப்பட்டது.

 

 படித்து படித்து சொன்ன மோடி.. கேட்காத எடப்பாடி.. கடைசியில் நடந்த சம்பவம்.. சீக்ரெட்டை உடைத்த ஓபிஎஸ் "

 

அதிமுக கூட்டணியில் பாமக?

 

இது தொடர்பாக அதிமுக, பாமக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, ஜிகே மணியின் மைத்துனர் இல்ல திருமண அழைப்பிதழை கொடுக்க எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தார் என்பது உண்மைதான். அந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு பாமகவில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவருமே ஒப்புக் கொண்டிருக்கின்றனர். வட தமிழ்நாட்டில் திமுக அதிகமான இடங்களைக் கைப்பற்றுவதைத் தடுக்க அதிமுக- பாமக கூட்டணி அவசியமாகிறது; இந்த கூட்டணி அமைந்து வலுவாக செயல்பட்டால் திமுக ஆட்சி அமைப்பதைத் தடுக்க முடியும் என இருதரப்பும் விவாதித்ததாம்.

 

அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா சீட்?

 

அத்துடன் அதிமுகவுடன் கூட்டணியை பாமக உறுதி செய்துவிட்டால் அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கொடுப்பது பற்றியும் அடுத்த கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாம். இதனால் ஜூலை மாதம் ராஜ்யசபா தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக அதிமுக- பாமக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம் என்கின்றன.

 

நடுத்தெருவில் தள்ளிவிடப்படும் தேமுதிக

 

அத்துடன், அதிமுக கூட்டணிக்கு பாமக வந்துவிட்டால் நிச்சயம் தேமுதிக வெளியேறும்; இதனை எல்லாம் கணக்கில் வைத்துதான் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் என ஏற்கனவே உறுதி மொழி கொடுத்திருந்தாலும் தற்போது வரை அதிமுக தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல் இருக்கிறதாம். அதிமுகவை ராஜ்யசபா சீட்டுக்காக நம்பி காத்திருந்த தேமுதிக, நடுத்தெருவில் விடப்படுவதுதான் நடக்கப் போகிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

 

BY.PTS NEWS M.KARTHIK

comment / reply_from

related_post