தொகுதி மறுவரையறை: தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி விஜய் வெளிப்படுத்திய நிலைப்பாடு

தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதால், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகிறது. நடிகர் விஜய், தொகுதி மறுவரையறை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் நியாயமான தேர்தல், நீதித்துறை சுதந்திரம், ஊடக சுதந்திரம், மாநில நிதி பகிர்வு குறித்து வலியுறுத்தியுள்ளார். தொகுதி மறுவறை விஜய் நிலைப்பாடு என்ன.? தொகுதி மறுவறை தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், விரைவில் நடைமுறைப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக அனைத்து கட்சி கூட்டமானது இன்று காலை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தொகுதி மறுவறை தொடர்பாக நடிகரும், தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் அரசியல் சாசனத்தின் 84ஆவது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் பணி, ஒன்றிய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும்
தற்போதைய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமலோ அல்லது இன்னொரு அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியோ இந்த மறுசீரமைப்பு நடைபெறலாம். எந்த முறையைப் பின்பற்றினாலும் அதில் "மாநிலங்களின் மக்கள் தொகை" என்பது ஒற்றை அளவுகோலாக இல்லாவிடினும் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்பது பட்டவர்த்தனமான உண்மை. புதிதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமோ அல்லது புதிய மக்கள் தொகையை ஒரு முக்கிய அளவுகோலாகக் கொண்டோ நிகழ்த்தப்படும் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் ஆபத்து உள்ளது. தென்மாநிலங்களுக்கு இது ஒரு பெரும் தண்டனை
கடந்த 50 ஆண்டுகளாகக் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டில் முதலீடு செய்து, தனது மக்கள்தொகை வளர்ச்சியைத் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு இது ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை. ஏற்கெனவே ஒரு மாநிலத்தில் இருந்து மட்டும் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அது மற்ற மாநிலங்களை விடக் கூடுதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இந்த வேறுபாடு மேலும் அதிகரிக்கக் கூடாது. தென் மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் தொகுதிகள் மேலும் குறைக்கப்பட்டாலோ அல்லது உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் கூடுதலாகத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலோ அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். மக்களவையில் 888 இருக்கை வசதிகள்
இந்நிலையில் புதிய நாளாளுமன்றக் கட்டடத்தின் மக்களவையில் 888 இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் பார்த்தால். ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் நீண்டகாலத் திட்டத்தில் இருந்ததாகவே தெரிகிறது. அப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ஒருவேளை தென் மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போதுள்ள விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்தாலும் அதுவும் ஓர் உகந்த முன்னெடுப்பாக அமையாது. ஏனென்றால்,
தற்போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்பொழுதே அனைத்து உறுப்பினர்களுக்கும் கேள்வி நேரங்களில் கேள்வி கேட்க அனுமதி கிடைப்பதில்லை; Ballot முறையிலேயே கேள்வி கேட்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்படியே வாய்ப்பு வழங்கப்பட்டாலும் பெரும்பாலும் சில நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வெறும் அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பலன்? ஜனநாயகக் கோட்பாடுகளை உளமாரக் காக்க விரும்பினால், ஒன்றிய அரசு கீழ்க்கண்டவற்றைத் தான் செய்ய வேண்டும்.
1. ஜனநாயகத்தின் ஆணி வேர் "சுதந்திரமான மற்றும் நியாயமான" தேர்தல் ஆகும் (free and fair elections). தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் Delimitation commissionஇல் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரும் முக்கிய உறுப்பினராக இருப்பார். ஒன்றிய அரசு தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆணையர்கள் Delimitation commissionஇல் பாரபட்சம் இன்றிச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு எப்படி வரும்?
2. நம் அரசியல் சாசனச் சட்டத்தைப் பாதுகாக்கும் முக்கிய அரணாக விளங்குவது நீதித் துறை. அத்தகைய ஜனநாயக முக்கியத்துவம் வாய்ந்த நீதித் துறையில், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களில் போதிய வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும். Collegium பரிந்துரைக்கும் அனைத்து நீதிபதிகளையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்வதில்லை என்பதை இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும். Delimitation commissionஇல் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமை வகிப்பார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
3. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகத் துறை, எந்த அச்சுறுத்தலும் இன்றிச் சுதந்திரமாகச் செயல்படும் சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். மேலும் CBI, IT, ED போன்ற புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள், அரசியல் தலையீடு இன்றிச் செயல்படும் நிலையை உருவாக்க வேண்டும்.
4. மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் கூட்டணி மற்றும் தேர்தல் கணக்குகளை விடுத்து, பாரபட்சமற்ற அணுகுமுறையைக் கொண்டு வர வேண்டும். குழந்தைகள் பெரியவர்களாக வளரும் வரையில்தான் பெற்றோர்களின் மேற்பார்வையும் கட்டுப்பாடுகளும் அவசியம். ஓரளவுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளுக்கு, தேவையான சுதந்திரம் கொடுத்தால்தான் குடும்பம் ஒற்றுமையாக நிலைத்திருக்கும். அதேபோல் இன்றைய சூழ்நிலையில் மாநிலங்களுக்கு சுயாட்சியும், உரிய நிதிப் பகிர்வு மற்றும் நிதிச் சுதந்திரமும் வழங்குவதே இந்தியா என்ற கூட்டுக் குடும்பத்தை இன்னும் ஒற்றுமையானதாக நிலைத்திருக்கச் செய்யும் ஜனநாயக வழியாகும் என விஜய்தெரிவித்துள்ளார்
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description