தினேஷ் கார்த்திக் - ஷாபாஸ் அகமது இணை அசத்தல்: த்ரில் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூரு
மும்பையில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அனுஜ் ராவத் மற்றும் டு பிளஸிஸ் கூட்டணி இந்தமுறை சுமாரான துவக்கம் கொடுத்தது. பவர் பிளே தாண்டி நீட்டித்த இவர்கள் 55 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் மூலமாக எடுத்தனர். 7வது ஓவரில் 29 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார் டு பிளஸிஸ். வேகப்பந்து வீச்சாளர்கள் முயன்றும் இந்தக் கூட்டங்கியை பிரிக்க முடியாத நிலையில் யுஸ்வேந்திரா சஹால் வந்தே இந்தக் கூட்டணியை பிரித்தார். அடுத்த ஓவரிலேயே சைனி அனுஜ் ராவத் 26 ரன்களில் வெளியேற்ற ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் சென்றது.
ஏனென்றால், அடுத்தடுத்து வந்த விராட் கோலி 5 ரன்களில் அவுட் ஆக, டேவிட் வில்லே ரன்கள் ஏதும் எடுக்காமலே ஆட்டமிழந்தார். ரூதர்போர்டும் நிலைக்க தவறினார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஷாபாஸ் அகமது மற்றும் தினேஷ் கார்த்திக் இணைந்து அணியை மீட்டெடுத்தனர். இருவரும் 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் பெங்களூர் அணி வெற்றி இலக்கை வெகு எளிதாக நெருங்க முடிந்தது.
17வது ஓவரில் தான் இந்தக் கூட்டணியை பிரிக்க முடிந்தது. 45 ரன்கள் எடுத்திருந்த ஷாபாஸ் அகமதுவை போல்ட் அவுட் ஆக்க, ஆட்டத்தில் திடீர் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 12 பந்துகளுக்கு 15 ரன்கள் என்ற நிலை உண்டானது. ஆனால், பிரசித் கிருஷ்ணா வீசிய 19வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசிய தினேஷ் கார்த்திக் வெற்றியை உறுதி செய்தார்.
3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இறுதி ஓவரை வீசினார். அவரின் முதல் பந்தை ஹர்ஷல் சிக்ஸருக்கு பறக்கவிட்டு அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 44 ரன்களுடனும், ஹர்ஷல் படேல் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் சஹால் மற்றும் ட்ரெண்ட் போல்ட் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினர்