குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும்..!
இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததுள்ளது. வாக்கு எண்ணிக்கையும் அன்றே நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் மேலும் கூறியது.
2022ஆம் ஆண்டின் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 17ம் தேதி என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்கள் உட்பட, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வக்களிப்பார்கள். குடியரசுத் துணை தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், வரும் ஜூலை 18-ம் தேதி நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் 21-ம் தேதி எண்ணப்படவுள்ளன. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கிய நிலையில், 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்