"களத்தில் இல்லாவிட்டாலும் உதவி செய்கிறார் விஜய்: சீமான் பாராட்டு
திருப்பூர்: 'விஜயால் களத்தில் நிற்க முடியவில்லை. அவருக்கு உதவி செய்யும் எண்ணம் இருப்பதை பாராட்டலாம்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருப்பூரில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. விஜயால் களத்தில் நிற்க முடியவில்லை. பிரச்னை இருக்கிறது. அவர் போய் களத்தில் இருந்தால், பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டத்தை விட, அவரை பார்க்க அதிகமான கூட்டம் வந்துவிடும். பிறகு அந்த பிரச்னையை சமாளிக்க வேண்டும். விஜயால் களத்திற்கு செல்ல முடியாவிட்டாலும், உதவி செய்யும் எண்ணம் இருப்பதை பாராட்டலாம்.
உதயநிதி பிறந்த நாள் கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். இதில் அமைச்சர்கள் எல்லாம் பாராட்டி பேசுவதை எப்படி பார்க்கிறீர்கள்? அவர் மக்களை வர வைத்து வேஷ்டி, சட்டை, அரிசி, பருப்பு கொடுக்கிறார். இந்த எண்ணத்தை பாராட்ட வேண்டும். பேரிடர் காலங்களில் மத்திய அரசு நிதி கொடுப்பதில்லை.
மாநில அரசுகள் கொடுக்கும் நிதி தான் மத்திய அரசுக்கு வருவாய். முதல் இடத்தில் மஹாராஷ்டிரா, இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. ஏன் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி கொடுக்க மறுக்கிறது. தமிழக அரசின் நடவடிக்கைகள் மழைநீரில் ஆழமாக மூழ்கிவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.