dark_mode
Image
  • Thursday, 12 December 2024

முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு தீர்வு காண வழி முயற்சிக்க வேண்டும்: பன்னீர்செல்வம் அறிக்கை

முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு தீர்வு காண வழி முயற்சிக்க வேண்டும்: பன்னீர்செல்வம் அறிக்கை
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கேரளா சென்றுள்ள நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காமல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை தொடர்ந்து புறக்கணிக்கும் கேரள அரசுக்கு கடும் கண்டனம் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுதுபார்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்ட பின் அணையின் நீர் மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் 27-02-2006 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பிற்கு எதிராக கேரள அரசு 18-03-2006 அன்று சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தபோது, மாண்புமிகு அம்மா அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தி.மு.க. அரசு மேற்படி வழக்கை விரைந்து முடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2011 ஆம் ஆண்டு மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், மிகப் பெரிய சட்டப் போராட்டம் நடத்தியதன் விளைவாக, 07-05-2014 அன்று உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பினை அளித்தது. இந்தத் தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுதுபார்க்கப்பட்டு பலப்படுத்தப்பட்ட பின்பு. அதன் முழுக் கொள்ளளவான அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு எவ்வித இடையூறும் அளிக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

 
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து பத்து ஆண்டுகளாகியும், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் ஆண்டு பராமரிப்புப் பணிகளைக்கூட மேற்கொள்ள கேரள அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. கேரள அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, தளவாட பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக் கோரி தமிழ்நாடு நீர்வளத் துறை சார்பில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கேரள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும், ஆனால், இதுநாள் வரை அந்தக் கடிதத்திற்கு பதில் இல்லாத நிலையில் தளவாடப் பொருட்கள் முல்லைப் பெரியாறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அதனை கேரள வனத் துறையினர் அனுமதிக்கவில்லை என்றும், கேரள நீர்ப்பாசனத் துறையின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கேரள அரசின் வனத் துறை தெரிவித்ததாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

கேரள அரசின் இந்தச் செயல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கும் செயல் ஆகும். கேரள அரசின் இந்தச் செயலைக் கண்டித்து நான்கு நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், தி.மு.க. அரசு வாய்மூடி மவுனியாக இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள அரசின் செயலைக் கண்டித்து அறிக்கை விட வேண்டிய மாண்புமிகு முதலமைச்சர் வாய் திறக்காதது தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன் வந்துவிட்டாரோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிதான் நடக்கிறது. காங்கிரஸ் கட்சி தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் தனக்குள்ள நெருக்கமான உறவை பயன்படுத்தி தளவாடப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதியை பெறுவதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் தயக்கம் காட்டுகிறார் என்று தெரியவில்லை. கேரள அரசின் தமிழக விரோதச் செயல்பாட்டினைக் கண்டித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொதித்து எழுந்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்ய மறுக்கிறார். உரிமைக்கு குரல் கொடுப்போம், உறவுக்கு கை கொடுப்போம் என்று வாயால் சொன்னால் மட்டும் போதாது, அதனைச் செயலில் காட்ட வேண்டும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 12-12-2024 அன்று கேரள மாநிலம், வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகத் திறப்பு விழாவிற்கு இன்று கேரளா சென்றிருப்பதாகவும், அந்த நிகழ்ச்சிக்கு கேரள முதலமைச்சர் அவர்கள் தலைமை வகிக்க இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த கேரள அரசு அதிகாரிகள் இடையூறு செய்வதைச் சுட்டிக்காட்டி, முடிந்தால் இதனை மேடையிலேயே வலியுறுத்தி இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றும், இதற்கு கேரள அரசு செவி சாய்க்காத பட்சத்தில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான உறவை முறித்துக் கொள்ளவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கும் கேரள அரசிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு தீர்வு காண வழி முயற்சிக்க வேண்டும்: பன்னீர்செல்வம் அறிக்கை

comment / reply_from

related_post

newsletter

newsletter_description