ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: மேலும் அதிர்ச்சி தகவல்கள் வெளியீடு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு விசாரணையில் அடுத்தடுத்து பகீர் தகவல்கள் வெளியானது.
இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், சிலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு கைமாற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவலை கூறினார்.
இந்த விவகாரத்தில் பல்வேறு சதிச் செயல்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்களின் விசாரணை, ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்குகளையும் அந்த வழக்குகளுடன் சேர்த்து தள்ளிவைக்க வேண்டுமெனவும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த மனு ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும் போதும் இதே காரணத்தை கூறி விசாரணையை தாமதப்படுத்துவதாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து அனைத்து மனுக்கள் மீதும் பதில் மனுத்தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது தொடர்பாக தனியாக விசாரணை நடத்த காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.