திருவண்ணாமலை மண்சரிவு.. 2 சிறுமிகளின் உடல்களை இன்னும் மீட்க முடியாத சோகம்.. உருக்கமான தகவல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மண் சரிவில் வீடு புதைந்ததில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 2 குழந்தைகள் உடல்கள் மீட்கப்படவில்லை. வீட்டின் உள்பகுதியில் 2 குழந்தைகள் சிக்கியதால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. அங்கு மண்ணுடன் சேர்ந்து ஒருபாறையும் இருந்தது.
இதையடுத்து அந்த பாறையை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் நவீன எந்திரங்கள் மூலம் வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பாறையை அப்புறப்படுத்தினால்தான் மற்ற 2 குழந்தைகளையும் மீட்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் மீட்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலையில் மீண்டும் மீட்பு பணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 'ஃபெஞ்சல்' புயல் காரணமாக வட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. திருவண்ணாமலையிலும் இதுவரை இல்லாத அளவு பலத்த மழை பெய்தது. திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை என அழைக்கப்படும் மலையின் அடிவாரத்தில் வ.உ.சி.நகர் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன.
மண் சரிவு: இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்த மலையில் இருந்து திடீரென மண் சரிந்து செங்கல்சூளை தொழிலாளி ராஜ்குமார் (வயது 32) என்பவரது வீடு புதைந்தது. கண் எதிரே வீடு புதையுண்டதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அந்த இடத்தில் அருகருகே வீடுகள் இருந்தன. வீட்டுக்கு செல்லும் பாதை மிகவும் குறுகலாக காணப்பட்டதால் பொக்லைன் உள்ளிட்ட எந்திரத்தின் உதவியுடன் உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளமுடியவில்லை. அரக்கோணத்தில் இருந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று அதிகாலை திருவண்ணாமலை சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மீட்பு பணியில் 170 பேர்: தேசிய பேரிடர் மீட்புக்குழு,, மாவட்ட போலீஸ் கமாண்டோ குழு, மாநில மீட்பு படை, திருவண்ணாமலை ஆயுதப்படை போலீசார் உள்பட 170 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மழை அவ்வப்போது பெய்ததால் மழைநீர் வீட்டுக்குள் புகுந்ததால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 10 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்ற நிலையில், மாலை 6 மணியளவில் வீட்டிற்குள் சிக்கிய பெண் குழந்தையை சடலமாக மீட்புப்படையினர் மீட்டனர்.
தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டபோது ராஜ்குமார், அவரது மனைவி மீனா, கவுதம் மற்றும் இனியா, மகா ஆகிய 5 பேரின் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன. இதையடுத்து அந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்சில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
2 பேரின் உடலை மீட்க முடியவில்லை: மேலும் வினோதினி மற்றும் ரம்யா ஆகிய 2 சிறுமிகள் வீட்டின் உள்பகுதியில் சிக்கியதால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. அங்கு மண்ணுடன் சேர்ந்து ஒருபாறையும் இருந்தது. இதையடுத்து அந்த பாறையை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் நவீன எந்திரங்கள் மூலம் வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பாறையை அப்புறப்படுத்தினால்தான் 2 சிறுமிகளையும் மீட்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. 20 மணி நேரமாக நடந்த மீட்பு பணி நேற்று 11 மணியளவில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலையில் மீண்டும் மீட்பு பணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உருக்கமான தகவல்கள்: இதற்கிடையே, வீட்டிற்குள் சிக்கியவர்கள் குறித்து உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய ராஜ்குமார் செங்கல் சூளையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மீனா. அவர்களின் 2 குழந்தைகள், பக்கத்து வீட்டு குழந்தைகள் மூன்று பேர் என 7 பேரும் சிக்கியிருக்கிறார்கள். உயிரிழந்தவர்கள் விவரம் வருமாறு:- ராஜ்குமார் ( வயது 32), மீனா (26), கவுதம் (9), இனியா (7), மகா ( 12), வினோதினி (14), ரம்யா (12) என 7 பேரின் அடையாளம் தெரியவந்துள்ளது.
சிறுவர்கள் 5 பேரும் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது மலையில் இருந்து மழை நீரும் பாறையும் உருண்டு வந்ததை பார்த்துள்ளார்கள். உடனே அச்சம் அடைந்து பாதுகாப்பிற்காக வீட்டிற்குள் சென்றுள்ளனர். அப்போதுதான் வீட்டையும் மண் மூடிக்கொண்டு இருக்கிறது. தற்போது 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டு இருக்கும் நிலையில், 2 பேரின் உடல்கள் மீட்கப்படவில்லை.