dark_mode
Image
  • Friday, 07 March 2025

குழந்தைகளுக்கான ஆதார் எடுப்பதில் சிக்கல் – பிறப்பு சான்றிதழ் விவகாரத்தில் பெற்றோர்கள் அவதி!

குழந்தைகளுக்கான ஆதார் எடுப்பதில் சிக்கல் – பிறப்பு சான்றிதழ் விவகாரத்தில் பெற்றோர்கள் அவதி!

சென்னை: குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அப்பாவின் பெயர் அவருடைய ஆதாரில் இருப்பது போல் இல்லை என்று கூறி அனுப்புவது உள்ளிட்ட செயல்களால், ஆதார் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பதற்காக பெற்றோர் பெயர் மாற்றம் செய்தபின்பு, ஏற்கனவே தாங்கள் வைத்திருந்த பான் கார்டு உள்பட அனைத்து ஆவணங்களிலும் பெயரை மாற்ற வேண்டிய நிலை இருப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

 

பிறப்பில் தொடங்கி வாழ்வின் இறுதிவரை அனைத்து செயல்களுக்கும் ஆதாரை கட்டாயமாக்கிவிட்டன மத்திய, மாநில அரசுகள்.. மானியத்தை முறைகேடாக பெறக்கூடாது என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஆதார், இன்றைக்கு பள்ளியில் சேர்ப்பது தொடங்கி, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பத்திரப்பதிவு உள்ளிட்ட அனைத்து அரசு திட்டங்களுக்கும் ஆதார் தேவை. ஆதாரை பெறுவது ஒன்றும் அவ்வளவு எளிதானது இல்லை.. ஆதார் கார்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய தபால் நிலையங்களில் (எல்லா இடங்களிலும் அல்ல) மட்டுமே பெற முடியும். அதற்கு ஒரு நாளே காத்திருக்க வேண்டும்,

 

அதேநேரம் தபால் நிலையம், அரசு இ-சேவை மையம், மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கி, பான் கார்டு எடுக்கும் நிலையங்களில் புதிய ஆதார் அட்டை மற்றும் திருத்தம் செய்ய வழி உள்ளது என்றாலும், ஆதார் தொடர்பான அனைத்து மாற்றத்திற்கும் ரூ.50 கட்டணமாக பெறப்பட்டு வருகிறது. முன்னதாக தனியார் இ-சேவை மையங்களில் ஆதார் தொடர்பான மாற்றங்கள் அனைத்தும் செய்ய முடிந்தது..

 

ஆனால் தனியார் இ சேவை மையங்களில் ஆதாரில் முகவரி மாற்றம் மட்டுமே செய்யப்படுகிறது. அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் நடத்தும் இ சேவை மையங்களில் ஆதாரில் திருத்தம் செய்ய முடியும். பயோமெட்ரிக் அக்சஸ் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் எடுக்க தபால் நிலையத்திற்கு மட்டுமே போக வேண்டும்.. அதுவும் சில இடங்களில் மட்டுமே எடுக்க முடியும்.

 

அதேநேரம் தபால் நிலையங்களில் குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க வேண்டும் என்றால். பிறப்பு சான்றிதழ் மற்றும் உடன் செல்லும் பெற்றோரின் ஆதாரை ஆவணமாக கேட்கிறார்கள்.ஆனால் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் மற்றும் சில தனியார் ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில், தாய், தந்தையின் பெயர்கள் பெரும்பாலும் 'இனிசியல்' இல்லாமல்தான் பதிவு செய்யப்படுவது நடக்கிறது. ஆனால், ஏற்கனவே தாய், தந்தையரின் ஆதாரில் 'இனிசியலு'டனும் அல்லது அவர்களுடைய தந்தையின் பெயர் முழுமையாக இருக்கிறது.

 

இதனால், 'குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அப்பாவின் பெயர் அவருடைய ஆதாரில் இருப்பது போல் இல்லை' எனக்கூறி திருப்பி அனுப்புவதும் நடக்கிறது. பிறப்பு சான்றிதழில் அப்பாவின் பெயரில் மாற்றம் செய்வது எளிதானது இல்லை. குழந்தைக்கு எங்கு பிறப்பு சான்றிதழ் பெறப்பட்டதோ அந்த ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று அப்பாவின் பெயரை மாற்ற வேண்டும்.

 

அதன்பின், புதிய ஆதார் எடுப்பதற்கு பதிவு செய்ய வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் எடுக்க செல்லும் பெற்றோர்கள் பெரும் சவாலை சந்திக்க வேண்டிய நிலை வரும். அதேபோல் குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பதற்காக பெற்றோர் பெயர் மாற்றம் செய்தபின்பு, ஏற்கனவே தாங்கள் வைத்திருந்த பான் கார்டு உள்பட அனைத்து ஆவணங்களிலும் பெயரை மாற்ற வேண்டிய சூழ்நிலையும் சில நேரங்களில் உருவாகிறது.

 

அதுமட்டுமின்றி புதிய ஆதார், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்ய ஏராளமான பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தபால் நிலையங்களுக்கு மிகப்பெரிய வரிசைகாத்திருக்கும். கடைசி வரையில் காத்திருந்து... காத்திருந்து... எடுக்க முடியாமல் அவதிப்படும் பெற்றோர்கள் ஏராளம். எனவே மத்திய அரசு இந்த விவகாரத்தில் பிரச்சனைகளை சரி செய்து, ஆதார் எடுப்பதை எளிதாக்க புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

comment / reply_from

related_post