உதயநிதியிடம் கோரிக்கை வைத்த தருமபுரி மலை கிராம மக்கள்.. அடுத்த 4 மணி நேரத்தில் தரைப்பாலம் ரெடி!
தருமபுரி: பெஞ்சல் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக, வத்தல்மலை அடிவாரத்தில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அங்கு நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தபோது, கிராம மக்கள், தரைப்பாலத்தை உடனே சீரமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்தனர். அடுத்த 4 மணி நேரத்தில் அங்கு தற்காலிக தரைப்பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்தது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த புயல் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி காரைக்கால் - மகாபலிபுரத்திற்கு இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தும், தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
இதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தன. அதிகமாக பாதிக்குள்ளான விழுப்புரம் மாவட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மற்ற மாவட்டங்களை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 2) தருமபுரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய, சென்னையில் இருந்து விமானம் மூலம் வருகை புரிந்தார்.
கனமழை காரணமாக, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தின்னஹள்ளி ஊராட்சி, வத்தல்மலை அடிவாரத்தில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், மலை அடிவாரத்திற்கு அந்த பக்கம் இருந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊருக்குள் வர முடியாமல் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம், அங்கு தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை பார்வையிட்டு, உடனடியாக தற்காலிக பாலத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், அப்பகுதி மக்களைச் சந்தித்து குறைகளையும் கேட்டறிந்தார்.
துணை முதல்வர் உதயநிதி நேற்று மாலை 5 மணியளவில் அங்கு ஆய்வு செய்து தரைப்பாலம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். இந்நிலையில், இரவு 9 மணிக்கெல்லாம் தற்காலிக தரைப்பாலம் தயாரானது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஃபெஞ்சல் புயலுக்குப் பின் தருமபுரி மாவட்டத்தில் பரவலாக பெய்த கன மழை காரணமாக, நல்லம்பள்ளி ஒன்றியம், தின்னஹள்ளி ஊராட்சி வத்தல்மலை அடிவாரத்தில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
சம்பந்தப்பட்ட இடத்தில் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, அங்குள்ள கிராம மக்கள், மலைவாழ் பழங்குடியின மக்கள் என சுமார் 2 ஆயிரம் பேர், தாங்கள் இந்தத் தரைப்பாலத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், அதனை உடனே சீரமைத்துத் தருமாறும் நம்மிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்துக்கு மாற்றாக தற்காலிக தரைப்பாலம் ஒன்றினை உடனடியாக அமைத்துத் தருமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டோம்.
அதன்படி, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்குள், தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் புதிய தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலன் கருதி, உடனுக்குடன் இதனைச் சாத்தியப்படுத்திய மாவட்ட நிர்வாகத்துக்கும், துறை சார்ந்த அதிகாரிகள் - அலுவலர்கள் - பணியாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு என்றென்றும் களத்தில் முன்னின்று மக்கள் துயர் துடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.