லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இன்னும் 15 நாளில் சிஏஏ சட்ட விதிகள் அமல்?: ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்

மக்களவை தேர்தல் அட்டவணை வெளியாகும் முன்பாக குடியுரிமை திருத்த சட்ட விதிகளை ஒன்றிய பாஜக அரசு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில் குடியுரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாஜக நிறைவேற்றியது. அதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும் கூட இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். அதாவது டிசம்பர் 31, 2014ம் ஆண்டுக்குள் குடியேறியவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்.
ஆனால் இதே நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அகதிகளுக்கு இந்த சட்டத்தின் கீழ் அனுமதியில்லை. அதேபோல இலங்கை வாழ் தமிழர்களுக்கும் அனுமதியில்லை என்று கூறப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த சட்டம் பெரும் சர்ச்சைகளையும், போராட்டங்களையும் உருவாக்கியது. இந்த நிலையில் குடியுரிமை திருத்தம் சட்ட விதிகளை ஒன்றிய அரசு விரைவில் வெளியிட உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'குடியுரிமையை பெற விரும்புவோர் பதிவு செய்வதற்காக ஆன்லைன் போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் குடியுரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய குடியுரிமை வழங்கும் அதிகாரம் ஒன்பது மாநிலங்களின் 30க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்துறைச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
இதுகுறித்து ஒன்றிய உள்துறை வட்டாரங்கள் கூறுகையில், 'குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்துவதற்கான விதிகள் அடுத்த பதினைந்து நாட்களுக்குள் அறிவிக்கப்படும். ஆனால் உறுதியாக தேதியை சொல்ல முடியாது. ஆனால் லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்பாக குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்துவதற்கான விதிகள் வெளியிடப்படும். புதிய சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது குடியுரிமை தொடர்பான ஆதாரங்களை காட்டி விண்ணப்பிக்கலாம்' என்று கூறின. குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு ஆர்வம் காட்டினாலும் கூட, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் தங்களது மாநிலத்தில், மேற்கண்ட சட்டம் அமல்படுத்தப்படாது என்று அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description