இண்டியா கூட்டணிக்கு மம்தா பானர்ஜி தலைமை: ஆதரவு பெருகுகிறது
'என்னை ஆதரித்ததற்காக, இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு நன்றி'என மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
''கூட்டணி என்றால் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். வாய்ப்பு வந்தால், இண்டியா கூட்டணியை வழிநடத்த நான் தயார்,'' என, மம்தா தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், 'கூட்டணி தலைவராகும் தகுதி மம்தாவுக்கு உண்டு' என்றார். சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அதை ஆமோதித்தார்.
எதிர்க்கட்சிகளின், 'இண்டியா' கூட்டணிக்கு தலைமை ஏற்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு பெருகுகிறது. காங்கிரசின் முக்கியத்துவத்தை குறைக்கும் இந்த முயற்சி, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, மித்னாப்பூர் மாவட்டத்தில் நிருபர்களுக்கு மம்தா பானர்ஜி அளித்த பேட்டி: என்னை ஆதரித்ததற்காக, இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னை கவுரவித்த அனைவருக்கும் நன்றி. இண்டியா கூட்டணி தலைவர்கள் என் மீது காட்டிய மரியாதைக்கு நான் அனைவருக்கும் கடமைப்பட்டு இருக்கிறேன். அவர்கள் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
அவர்கள் நலமாக இருக்கட்டும். இண்டியா கூட்டணி நன்றாக இருக்கட்டும். நான் இண்டியா கூட்டணியை வழிநடத்துவேன். இப்போது அதை நான் முன்னின்று நடத்துவேன். அவர்களால் கூட்டணியை வழிநடத்த முடியாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்? என்னால் அனைவரையும் ஒன்றாக அழைத்து செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.