அரசுடனான இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஃபைசர் தடுப்பூசி நிறுவனம்- விரைவில் இந்தியாவில் இறக்குமதி செய்யலாம்.!
இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. ஸ்புட்னிக் v தடுப்பூசியும் விரைவில் முழு அளவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இருப்பினும் இந்தியாவில் தற்போது நிலவும் தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடு தொடரும் என்ற நிலையே தற்போதுவரை நீடிக்கிறது.
இதனால் தடுப்பூசி தட்டுப்பாட்டைக் குறைக்கும் விதமாக, ஃபைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அந்த நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஃபைசர் நிறுவனமோ, இந்தியாவிற்கு தடுப்பூசி அளிக்க, சட்ட நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு உட்பட பல்வேறு சலுகைகளைக் கேட்டு வந்தது.
இந்த சலுகைகள் அளிக்கப்பட்டால், தடுப்பூசியால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு ஃபைசர் நிறுவனத்தின் மேல் இந்தியாவால் வழக்கு தொடர முடியாது என்ற நிலையில், மத்திய அரசு ஃபைசரின் கோரிக்கையை ஏற்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஃபைசர் நிறுவனம், கரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி வாங்குவதில் கடைசி கட்டத்தில் இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து கூறியுள்ள அவர், "அரசுடனான ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வோம் என நம்புகிறோம்" என்றார்.
இந்தியாவில் ஃபைசர் தடுப்பூசியின் ஒரு டோஸின் விலை 730 - 876 ரூபாய் வரை விற்கப்படலாம் என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.