dark_mode
Image
  • Friday, 29 November 2024

"#Manipur மக்களை பாதுகாப்பதில் தோல்வி அடைந்துவிட்டார் பிரதமர் மோடி!" - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

ணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த மத்திய அரசு 16 மாதங்களாக எதுவும் செய்யவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நடந்து வரும் மெய்டேய் இனத்தினருக்கும் குக்கி இனத்தினருக்கும் இடையிலான தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது ட்ரோன்கள் மூலமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டும் தாக்குதல் நடக்கிறது. செஞ்சம் சிராங் கிராமத்தில் உள்ள வீடுகளின் மீது, ஞாயிற்றுக்கிழமையில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால், அப்பகுதி மக்கள் வீடுகளில் தக்குவதற்கு அஞ்சி, சுமார் 10 குடும்பங்கள் வரையில் சமூக மண்டபங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில், மணிப்பூரை பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தோல்வியடைந்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

மணிப்பூர் மாநிலம் வன்முறையில் மூழ்கி 16 மாதங்கள் ஆகின்றன. ஆனால், வன்முறையை தடுக்க 'இரட்டை இன்ஜின்'அரசு எதுவும் செய்யவில்லை. அனைத்து சமூக மக்களிடமும் மணிப்பூரில் அமைதியும் இயல்புநிலையும் திரும்பும் என்ற நம்பிக்கையை விதைக்கும் விதத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

1.மணிப்பூர் முதலமைச்சர் ஏன் இன்னும் பதவி நீக்கம் செய்யவில்லை? பதவி நீக்கம் நடந்துவிடாமல் தடுக்கும் நோக்கில், ராஜினாமா நாடகம் நடத்தியவர் அல்லவா அவர்?

2. ஏன் இவ்வளவு இரக்கமற்று இருக்கிறீர்கள்? மணிப்பூருக்கு இதுவரை நீங்கள் செல்லாதது குறித்து ஏன் கவலைப்படாமல் இருக்கிறீர்கள்? உங்கள் ஈகோ காரணமாகவே, மணிப்பூரில் அனைத்து சமூக மக்களும் பாதிக்கப்படுகின்றனர். திறமையற்ற அரசால், அடிப்படையான சமாதான நடவடிக்கையை கூட தொடங்க முடியவில்லை.

3.இம்பால் மேற்கு மாவட்டத்தில் இப்போது ட்ரோன் மூலம் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ஆழ்ந்து தூங்குவது போல் தெரிகிறது. உங்கள் சொந்த பாஜக தலைவர்கள் மற்றும் அவர்களின் வீடுகள் கூட தாக்கப்படுகின்றன. நிவாரண முகாம்களின் மோசமான நிலைமைகளுக்கு எதிராக குரல் எழுப்பியதால்தான் மாநில ஆளுநர் நீக்கப்பட்டாரா?

குறைந்தது 235 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். 67,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பரிதாபமான நிலையில், நிவாரண முகாம்களில் தொடர்ந்து தவித்து வருகின்றனர்.

உள்நாட்டுக் கொந்தளிப்பைத் தவிர, இப்போது மணிப்பூரின் எல்லைகளில் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலும் பெரிய அளவில் உள்ளது. மணிப்பூர் மக்களைப் பாதுகாப்பதில் நீங்கள் மோசமாகத் தவறிவிட்டீர்கள். இந்திய மக்களுக்கு நீங்கள் செய்த துரோகங்களின் நீண்ட பட்டியலில், மணிப்பூர் கொந்தளிப்பு முக்கியமானது'

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

comment / reply_from

related_post

newsletter

newsletter_description