#B.ed படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!
நடப்பாண்டு பி.எட். படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு முடிவடைந்த நிலையில், விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது.
நடப்பாண்டில் பி.எட். படிப்பில், தமிழ்நாட்டில் 7 அரசு கல்லூரிகளில் உள்ள 900 இடங்கள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 1,140 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கி 26ம் தேதி நிறைவடைந்தது. விண்ணப்ப தாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை, ஆன்லைன் மூலமாகவும், டிடி மூலமாகவும் செலுத்தினர்.
நடப்பாண்டு பி.எட். படிப்பிற்கு மொத்தம் 3,486 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 2,187 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். இந்நிலையில், கல்லூரி கல்விஇயக்ககம் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி பி.எட். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (செப்டம்பர்-30ம் தேதி) வெளியிடப்படுகிறது. எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை போன்ற விவரங்கள் https://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, விரும்பும் கல்லூரியைத் தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 14-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி முடிவடைகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு அக்டோபர் 23-ம் தேதி தொடங்குகிறது.